கொரோனா பாதிப்பால் நேர்ந்த சோகம்; புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை...பெரும் அதிர்ச்சியில் நெல்லை மக்கள்..!!

நெல்லை: நெல்லையில் அல்வாவுக்கு புகழ்பெற்ற இருட்டுக்கடை உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹரிசிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நெல்லை என்றாலே இருட்டுக்கடை அல்வாதான், இருட்டுக்கடை அல்வாவிற்கு தனி மவுசு உண்டு என்றே சொல்லலாம். நெல்லையில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா என்பது பல நூற்றாண்டுகள் பழமையானது.

இந்நிலையில் இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் ஹரிசிங் என்பவருக்கு கடந்த 23ம் தேதி காய்ச்சல், இருமல் இருந்தது. இதனை தொடர்ந்து அவர், நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, ஹரிசிங் மருத்துவமனையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  

இதேபோல் அவரது மருமகனுக்கும் கொரோனா தொற்று அறிகுறி இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது குடும்பத்தார் வசித்து வரும் நெல்லை டவுன் பகுதியில் உள்ள அம்மன் சன்னதி தெருவில் தீவிர துப்புரவு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. ஹரிசிங் தற்கொலை குறித்து நெல்லை பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டது நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: