சீதாக்கமங்கலத்தில் சாகுபடி செய்த பருத்தியில் வெள்ளை ஈ மாவுப்பூச்சி தாக்குதல்: வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் ஆய்வு

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டாரத்தில் உள்ள சீதாக்கமங்கலம், உக்கடை கிராமங்களில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் ராஜாரமேஷ், மண்ணியல்துறை உதவி பேராசிரியர் அனுராதா மற்றும் குடவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் லட்சுமி காந்தன் ஆகியோர் பருத்தி வயலில் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு சில இடங்களில் மாவுப்பூச்சி மற்றும் வெள்ளை ஈயின்தாக்குதல் தென்படுவதாகவும், அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி கூறியதாவது: பருத்தியில் மாவுப்பூச்சியானது கூட்டமாக இலைகள், இளம் தண்டுகளில் பரவி காணப்படும். இலை மற்றும் தண்டின் சாறை உறிஞ்சுவதால் இலைகள் சிறுத்து, மடங்கி மஞ்சள் நிறமாகி பின்னர் உதிர்ந்து விடும். தாக்கப்பட்ட செடியானது “வளர்ச்சியின்றி குட்டையாக காணப்படும். வெள்ளை ஈக்கள் இலைகளில் அடிப்பக்கத்தில் கூட்டம் கூட்டமாக இருந்துக் கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் வெளிர் பச்சை நிறமும், பின்பு பழுப்பு நிறமடைந்து காய்ந்து உதிர்ந்து விடுகின்றன.

இதனை கட்டுப்படுத்தும் முறைகளான வயலில் காணப்படும் களைச்செடிகளை அழித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பொறி வண்டின் புழுக்கள் மாவுப்பூச்சி மற்றும் வெள்ளை ஈயின் அனைத்து வளர்ச்சி நிலைகளையும் உண்கின்றன. இந்த இறை விழுங்கியை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். தாவர பூச்சி கொல்லிகளான வேப்ப எண்ணெய் 2 சதம் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் அல்லது வேப்பங்கொட்டை கரைசல் 5 சதம் அல்லது மீன் எண்ணை சோப்பு, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் என்ற அளவில் தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். வேப்ப எண்ணை சார்ந்த மருந்தான அசடிராக்டின் 0.5 சதவீத கரைசல் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மிலி என்றளவில் அல்லது வேப்பம் பருப்பிலிருந்து பெறப்பட்ட சாறு 5 சதம் தெளிப்பதால் வெள்ளை ஈ பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்று கூறினார். இந்த ஆய்வின்போது வேளாண்மை அலுவலர் வித்யானந்தபதி, துணை வேளாண்மை அலுவலர் ரவி மற்றும் வேளாண்மை உதவி அலுவலர் முருகன், கவியரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: