காசியிடம் ஏமாந்த பெண்கள் தற்கொலை மிரட்டல்: சிபிசிஐடி விசாரணையில் பின்னடைவு

நாகர்கோவில்: காசியால் சீரழிக்கப்பட்ட இளம்பெண்களிடம் புகார் அளிக்க வற்புறுத்தும் பட்சத்தில் அவர்கள் தற்கொலை மிரட்டல் விடுப்பதால் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் திடீர் சிக்கல் உருவாகி உள்ளது. சென்னை பெண் டாக்டர் உள்பட பல இளம்பெண்களுடன் பழகி அவர்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியதை தொடர்ந்து வழக்கு விசாரணை வேகமெடுத்து உள்ளது.

இந்த வழக்கில் தற்போது கைதாகி உள்ள நாகர்கோவில் காசி (26) மற்றும் அவரது நண்பர் டைசன் ஜினோ (19) ஆகியோரை சிபிசிஐடி போலீசார், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே காசியுடன் நெருக்கமாக பழகி வீடியோவில் சிக்கிய சில பெண்களின் மொபைல் எண்கள் சிபிசிஐடி போலீசாருக்கு கிடைத்தன. அதன் மூலம் அந்த பெண்களை தொடர்பு கொண்டு, புகார் அளிக்க விருப்பமா? என சிபிசிஐடி போலீசார் கேட்டனர்.

இவர்களில் நாகர்கோவிலில் உள்ள பல வி.ஐ.பி.க்களின் குடும்ப பெண்களும் அடங்குவர். ஆனால் இதில் பலர் தங்களுக்கு புகார் அளிக்க விருப்பம் இல்லை என கூறி உள்ளனர். சிலர் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர். இன்னும் சில இளம்பெண்கள், தங்களை வற்புறுத்தினால் தற்கொலை செய்வோம் என மிரட்டி உள்ளனர். இதனால் சிபிசிஐடி விசாரணையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புகார்  தருபவர்கள்  பற்றிய எந்த விபரமும் வெளியே வராது. மிகவும் ரகசியமாக விசாரணை நடக்கும். எனவே காசியால் ஏமாற்றப்பட்ட பெண்கள், தைரியமாக வந்து புகார் அளிக்க வேண்டும் என சிபிசிஐடி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: