சந்தன கடத்தல் வீரப்பன் கிராமத்தில் இருந்து சாட்டிலைட் போனில் பேசிய மர்ம நபர்கள்

சாம்ராஜ்நகர்: இந்தியாவில்  தனிநபர்கள் சாட்டிலைட் போன் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.  இந்நிலையில், கர்நாடகா மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலய எல்லைக்குட்பட்ட  பகுதியில் இருந்து மர்ம நபர்கள் வெளியாட்களுடன் இந்த போன் மூலம் பேசியுள்ளனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி கர்நாடக போலீசார், மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், போலீசார் நடத்திய தீவிர  விசாரணையில், சந்தன கடத்தல் வீரப்பனின் சொந்த ஊரான கோபிநத்தம்  கிராமத்தில் இருந்து சாட்டிலைட் போனில்  மர்ம நபர்கள் பேசியதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் வெளிநாட்டினரா? நக்சலைட்டுகளா? அல்லது தீவிரவாதிகளா?  என தெரியவில்லை. அவர்களை பிடிக்கும் முயற்சியில் நக்சலைட் ஒழிப்பு படையினரும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.  இது குறித்து சாம்ராஜ் நகர் மாவட்ட எஸ்பி ஆனந்த குமார் கூறுகையில், ‘‘பொதுவாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரும்போது, சாட்டிலைட் போனில் பேசுவார்கள்.  ஆனால், காட்டுக்கு சென்று பேச மாட்டார்கள். எனவே, கோபிநத்தம் கிராமத்தில்  இருந்து பேசியவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரிக்கிறோம்,’’ என்றார்

Related Stories: