ஓராண்டு நடத்தாவிட்டால் 12 ஆண்டுகள் தடைபடும் பூரி ஜெகன்நாதர் தேரோட்டத்தைபக்தர்கள் இல்லாமல் நடத்தலாம்

* உச்ச நீதிமன்றத்தில் மன்றாடும் இஸ்லாமியர்

* ரத கட்டுமானப் பணியில் 800 சேவகர்கள், 372 தச்சர்கள், ஆச்சாரிகள், கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

* மேலும், கோயிலில் 132 காவலர்கள் உள்ளனர். மொத்தமாக 1,304 பேர் உள்ளனர்.

* இவர்கள் கடந்த ஒன்றரை மாதமாக தனி மனித இடைவெளியை பின்பற்றி இருந்ததால், கொரோனா தொற்று இல்லாமல் இருக்கின்றனர்.

* ஒரு தேரை இழுத்து செல்வதற்கு 200 பேர் மட்டுமே போதும். எனவே, 3 தேரை இழுத்து செல்வதற்கு 600 பேர்தான் தேவை.

புதுடெல்லி:  ஒடிசாவில் பூரி ஜெகன்நாதர் கோயில் தேர் திருவிழாவை பக்தர்கள் இன்றி நடத்துவதற்கு அனுமதிக்க கோரி இஸ்லாமியர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். ஒடிசாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் தேர் திருவிழா உலகப் புகழ் பெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கொரோனா பரவியுள்ள நிலையில், இந்தாண்டு இந்த தேரோட்டத்தை நடத்தினால் தொற்று அதிகளவில் பரவும் அபாயம் உள்ளதாக, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த 16ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர் திருவிழாவிற்கு தடை விதித்து உத்தரவிட்டது. இது, பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், ஒடிசா மாநிலம், நயாகர் மாவட்டத்தை சேர்ந்த அப்தாப் ஹூசைன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், ‘பூரி தேர் திருவிழா மதம், மதச்சார்பற்ற சடங்குகளுடன் தொடர்புடையது. கோயிலில் உள்ள சேவகர்கள் மூலமாக தேர் திருவிழா  நடத்தப்படுவதாக இருந்தால், அதில் பங்கேற்காமல் மக்கள் சுயமாக விலகிக் கொள்வதற்கு தயாராக உள்ளனர். ஒரு ஆண்டு தேர் திருவிழா தடைபடுமானால் தொடர்ந்து 12 ஆண்டுகள் அதை கண்டிப்பாக நடத்த முடியாத சூழல் உருவாகும். இது, ஜெகன்நாதர் கோயில் பராம்பரியத்தை கண்டிப்பாக பாதிக்கும். எனவே, இந்தாண்டு பக்தர்கள் இன்றி தேர் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

இதேபோல், ‘ஜெகன்நாத் சான்ஸ்கிரித் ஜன ஜகரானா மன்ச்,’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ‘ஜெகன்நாதர் கோயிலில் 1,304 பேர் பணியாளர்கள் கொரோனா பாதிப்பின்றி உள்ளனர். இவர்கள் மூலமாக, தேரை இழுப்பதற்கான ஆட்கள் தேவை பூர்த்தி செய்து கொள்ளப்படும். எனவே, பக்தர்கள் இன்றி தேர் திருவிழாவை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்,’ என்று கோரப்பட்டுள்ளது. இதேபோல், மேலும் சில அமைப்புகளும் இதே கோரிக்கை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன.

Related Stories: