ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் அன்புமணி மனு

சென்னை: மருத்துவ படிப்பில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவு மாணவர்களுக்கான 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற விவகாரத்தில் பாமக எம்பி அன்புமணி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ஓபிசி பிரிவினருக்கு 27சதவீதம் இடஒதுக்கீடு வழங்க தயாராக உள்ளதாகவும், அது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது.இந்த நிலையில், பாமக எம்பி அன்புமணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,”அகில இந்திய இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான 27 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

அதேபோல் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சலோனி குமாரி வழக்கில் தன்னையும் மனுதாரராக இணைத்துக்கொள்ள வேண்டும். மேலும் இதுதொடர்பான வழக்கு ஜூலை 8ம் தேதி வரவுள்ள நிலையில், அதனை விரைவாக விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதில் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அரசியல் கட்சிகளின் ரிட் மனுக்கள் சில தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தேவைப்பட்டால் சலோனி குமாரி வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என நீதிபதிகள் மனுதாரர்களுக்கு அறிவுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: