தக்கலை அருகே கொரோனா பீதியால் சென்னையில் இருந்து வந்தவர்களை அனுமதிக்க மறுத்த கிராம மக்கள்

தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே  வலியகரையை சேர்ந்த 3 பேர் சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு  முன்பு ஊருக்கு வந்து உள்ளனர். அவர்கள் இ பாஸ் பெறாமலும், பரிசோதனை  செய்யாமலும் வந்ததாக தெரிகிறது. இதையடுத்து வலியகரை கிராம மக்கள் அவர்களை  ஊருக்குள் அனுமதிக்கவில்லை. இது குறித்து வருவாய்த்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதற்குள், 3 பேரும் தக்கலை பேலஸ் ரோட்டில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து  தங்கி உள்ளனர். இதையறிந்த வருவாய்த்துறையினர் அவர்களை அங்கேயே  தனிமைப்படுத்தியதுடன், வெளியூரில் இருந்து வந்த நபர்களுக்கு அறை கொடுத்தது  குறித்து விடுதி நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பினர். பின்னர்,  நேற்றுமுன்தினம் மாலை 3 பேரையும் பரிசோதனைக்கு அழைத்து  சென்றனர்.

மகனை பற்றி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த தாய்: கேரளாவில்  இருந்து அனுமதி பெறாமல் 29 வயது  வாலிபர் ஒருவர் முத்தலக்குறிச்சியில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.  இந்த  தகவலை அவரது தாயார் சுகாதாரத்துறைக்கு கூறினார்.  இதையடுத்து  அவரை பரிசோதனை செய்ய அதிகாரிகள் வந்தனர். அப்போது வீட்டிற்குள்   அதிகாரிகளை அனுமதிக்காத வாலிபர், கேஸ் சிலிண்டரை திறந்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். சில நிமிட மிரட்டலுக்குபின் வாலிபரை வெளியே அழைத்து வந்தனர். பின்னர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்  கல்லூரி  மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

Related Stories: