மனைவிக்கு மாதவிடாய் நேரத்தில் கணவனுக்கும் லீவ்:பெங்களூரு தனியார் நிறுவனம் அசத்தல்

பெங்களூரு : மனைவிக்கு மாதவிடாய் நாட்களில் அவருக்கு உதவியாக இருக்க  கணவனுக்கும் சேர்த்து சம்பளத்துடன் விடுமுறை அளித்து பெங்களூரு தனியார்  நிறுவனம் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் கம்ப்யூட்டர்  நிறுவனங்களான ஸ்டார்ட்அப் மற்றும் ஹார்சஸ் ஸ்டேபள் ஆகியன இயங்கி  வருகின்றன.

இந்த நிறுவனத்தில் 60 சதவீத பெண்களும், 40 சதவீத ஆண்களும் வேலை  பார்க்கிறார்கள். பலர் தம்பதிகளாகவும் வேலை பார்க்கிறார்கள். இந்நிலையில்  பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் சிறப்பு சலுகையாக ₹250 வழங்கி 2 நாள்  விடுமுறையும் அளிக்கப்படுகிறது. மேலும் அவரது கணவர் இதே நிறுவனத்தில்  பணிபுரிந்து வந்தால் மனைவிக்கு உதவியாகவும் ஆறுதலாகவும் வீட்டில் இருந்து  கவனித்துக்கொள்ள அவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கிறது.

ஆண்,  பெண் பாகுபாடின்றி வீட்டில் இருவரும் சமமாக இருந்து குடும்பத்தை நடத்த  வேண்டும் என்ற எண்ணம் உருவாகுவதற்காக இதுபோன்ற ஒரு முயற்சியை  மேற்கொண்டுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹார்சஸ்  புரோடக்ஸன்ஸ் நிறுவனர் சலோனி அகர்வால் கூறுகையில், ‘‘மாதவிடாய் நாட்களில் பல  பெண்கள் அடிவயிறு வலியால் மிகவும் சிரமப்படுவார்கள். இதுபோன்ற நேரத்தில்  மன அழுத்தம் அதிகமாக இருக்கும். அப்போது விடுமுறை அவர்களுக்கு வழங்குவதுடன்  கணவரும் அருகில் இருந்தால் மிகவும் நம்பிக்கையாக பெண்கள் உணர்வார்கள்’’  என்றார்.

இந்த விடுமுறையை நாங்கள் மருத்துவ விடுப்பாக கூட கணிக்கில்  எடுப்பதில்லை என்று அந்த நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.  நிறுவனத்தின் இந்த அறிவிப்பை தம்பதியாக வேலைபார்க்கும் ஊழியர்கள்  மனதார வரவேற்றுள்ளனர்.

Related Stories: