சென்னையிலிருந்து பொய்யான காரணம் கூறி உறவினர்களை அழைத்து வந்த தலைமையாசிரியர் மீது வழக்கு

*கார் பறிமுதல் கோவில்பட்டி அருகே பரபரப்பு

கோவில்பட்டி : பொய்யான காரணம் கூறி இ-பாஸ் பெற்று சென்னை சென்று உறவினர்களை அழைத்து வந்த தலைமையாசிரியர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ராஜிவ்நகர் இ.பி.காலனியை சேர்ந்த கோயில்பிள்ளை மகன் அமல்ராஜ் (47). வீரபாண்டியாபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றும் இவர் மருத்துவ பரிசோதனைக்காக தனது காரில் சென்னை ஸ்ரீபெரும்புதூர் சென்று திரும்ப கடந்த 5 முதல் 7ம் தேதி வரை 3 நாட்களுக்கு இ-பாஸ் பெற்றுள்ளார்.

இதையடுத்து 5ம் தேதி கோவில்பட்டி அருகே மஞ்சநாயக்கன்பட்டியில் இருந்து எட்டயபுரம் வழியாக 2 உறவினர்களுடன் அமல்ராஜ் காரில் சென்னைக்கு சென்றார். ஸ்ரீபெரும்புதூரில் உறவினர்கள் இருவரையும் இறக்கி விட்டு, அங்கிருந்து திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அசோக்நகருக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து உறவினர்கள் 2 பேரை ஏற்றிக் கொண்டு காரில் கோவில்பட்டி அருகே தெற்கு மயிலோடை கிராமத்திற்கு கடந்த 7ம் தேதி வந்தடைந்தார்.

 இந்நிலையில் இவர், உண்மையான காரணத்தை மறைத்து சென்னை சென்று வந்தது வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதுகுறித்து பாண்டவர்மங்கலம்வி.ஏ.ஓ. கொடுத்த புகாரின்பேரில் அவர் மீது வழக்குப்பதிந்து காரை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

Related Stories: