மாநகராட்சியின் தீவிர நடவடிக்கைகளால் கொரோனா கோர பிடியில் இருந்து மீண்ட மும்பை தாராவி

மும்பை : மக்கள் நெருக்கடி மிகுந்த தாராவி குடிசைப்பகுதியில் சமூக இடைவெளிக்கு வாய்ப்பு இல்லாத நிலையில் வைரஸ் தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்ததே கொரோனாவில் இருந்து தாராவி மீள முக்கிய காரணம் என மாநகராட்சி கூடுதல் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

 மும்பை ‘ஜி வடக்கு’ வார்டில் உள்ள தாராவி ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படுகிறது. இங்கு 10 அடி வீட்டில் 10 பேர் என்ற நெருக்கடியான நிலையில் வசிக்கின்றனர்.

சமூக இடைவெளி இங்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. தற்போது இங்கு கொரோனா தொற்று தீவிரமாக இருப்பவர்களை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம் என்ற நிலைக்கு மாறியுள்ளது. இது எப்படி சாத்தியமானது?.

அதுகுறித்து விளக்குகிறார் என ஜி வடக்கு வார்டு உதவி கமிஷனர் கிரண் திகாவ்கர். அவர் கூறியதாவது;

மக்கள்நெருக்கம் மிகுந்த தாராவியில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதன் முதலில் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார். குறிப்பாக மும்ைபயிலேயே அதிகளவு கொரோனா நோயாளிகள் உள்ள பகுதியாக ஜி வடக்கு வார்டு கண்டறியப்பட்டதும் அதிர்ச்சியடைந்தோம். 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மும்பை மற்றும் தாராவியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை விட குணமடைந்துள்ளவர்கள் எண்ணிக்கை அதிகம் என்ற நிலைக்கு மாறியுள்ளது.

இந்த நோய் இருமடங்காக அதிகரிக்கும் நாளும் 16 நாட்களாக அதிகரித்துள்ளது. குறிப்பாக சிறு தொழிற்கூடங்கள் தாராவியில் மீண்டும் திறக்கப்பட்டதும் புதிதாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. எனவே நாங்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதை பற்றி கவலைப்படவில்லை. வைரஸ் தொற்று இருப்பவர்களை முன்னதாகவே கண்டறிந்து சிகிச்சை அளித்ததால் தான் பாதிக்கப்பட்ட நோயாளிகள் விரைவாக குணமடைந்தனர்.

கடந்த 2 மாதங்களை ஒப்பிடுகையில் தற்போது இங்குள்ள நிலைமை மிகச் சிறப்பாகவே உள்ளது. நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என கவலைக் கொள்ளவில்லை. மாறாக எத்தனை பேரை குணப்படுத்த முடியும் என்பதை பற்றிதான் அக்கறை கொண்டோம். இது தவிர சிகிச்சை அளிப்பது, இறப்ைப தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டோம். அதிகம் பேருக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதால் அவர்கள் வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதை ஆரம்பக் கட்டத்திலேயே எங்களால் கண்டறிய முடிந்தது.

இதையடுத்து நாங்கள் சிகிச்சையை உடனே தொடங்கியதால் ஏராளமானோர் விரைவில் குணமடைந்தனர். வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அதைவிட கூடுதலாக குணமடைவோர் எண்ணிக்கை இருந்ததே எங்களுக்கு கிடைத்த வெற்றி.

குறுகிய இடத்தில் வாழும் மக்களை தனிமைப்படுத்த ஏற்படுத்திய குவாரண்டைன் மையங்களும், மருத்துவர்களின் தினசரி பரிசோதனைகளும், நோயாளிகளுக்கு முறையாக வழங்கப்பட்ட உணவு ஆகியவையே நோய்அறிகுறி உள்ளவர்களை தானாக முன்வந்து நோய் இருப்பது பற்றி எங்களிடம் தெரிவிக்க செய்தது. ஆகியவை கொரோனா பாதித்தவர்களுக்கு உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய உதவியது என்றார்.

அலட்சியமாக பார்த்தவர்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்

தாராவியில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது, தாராவியையும் தாராவி வாழ் மக்களையும் மும்பை நகரின் பிற பகுதி மக்கள் அலட்சியத்துடனும் அருவருப்புடனும் பார்த்தது என்னவோ உண்மைதான். கொரோனா பாதிப்பு இல்லாத போதிலும் தாராவியை சேர்ந்த பலர் வேலையில் இருந்து திடீரென நீக்கப்பட்டனர்.

மாகிமை சேர்ந்த குடியிருப்புவாசிகளோ, தாராவி மக்கள் மாகிமுக்கு வருவதை தடை செய்ய வேண்டும் என்று மாநகராட்சிக்கு பகிரங்கமாக கோரிக்கை விடும் அளவுக்கு தாராவியை மிக மோசமான கண்ணோட்டத்துடன் பார்த்தனர். ஆனால், தாராவி மக்களின் ஒத்துழைப்புடன் மாநகராட்சி மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் தாராவியில் கொரோனா வைரஸ் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ஜி வடக்கு வார்டில் வரும் மாகிம், தாதரை விட அண்மைக்காலமாக தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. தாராவியில் கொரோனா வைரசால் மக்கள் கொத்துக் கொத்தாக பாதிக்கப்படுவார்கள் என்று கருதிய மும்பை நகரவாசிகள் இப்போது அதே தாராவியை ஆச்சரியத்துடன் பார்க்கத்  தொடங்கியிருக்கிறார்கள்.

Related Stories: