மணிப்பூரில் பாஜ அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

இம்பால்: மணிப்பூரில் பாஜ அரசின் பெரும்பான்மை குறைந்துள்ளதால் அதன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2017 தேர்தலில் 28 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வந்த போதிலும், 21 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜ.வை ஆட்சியமைக்க ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா  அழைத்தார். இதையடுத்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜ ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், பாஜ எம்எல்ஏ.க்கள் சுபாஷ் சந்திர சிங், ஹவோகிப், சாமுவேல் ஜென்டாய் ஆகியோர் நேற்று முன்தினம் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, காங்கிரசில் இணைந்தனர். இவர்களுடன் தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த துணை முதல்வர் ஜாய் குமார் சிங் உட்பட 4 எம்எல்ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். மொத்தம், 9 எம்எல்ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால், பாஜ அரசு பெரும்பான்மையை இழந்தது.

இந்நிலையில், முன்னாள் முதல்வரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான இபோபி சிங் கூறுகையில், ``ராஜினாமா செய்த எம்எல்ஏ.க்களுடன் ஆட்சி அமைப்பது குறித்து கலந்து பேசி உள்ளேன். பாஜ அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர விரைவில் சிறப்பு பேரவை கூட்டத்தை கூட்டும்படி சபாநாயகர் கெம்சந்திடம்  கோரிக்கை விடுத்துள்ளோம்’’ என்றார்.

சபாநாயகரை நீக்க நோட்டீஸ்

3 பாஜ எம்எல்ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் கெம்சந்த் இன்னும் ஏற்கவில்லை. மேலும், முதல்வர் பிரேன் சிங் ஆட்சி அமைத்த போது, 9 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் பதவி விலகினர். அவர்களின் பதவியை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பறிக்க சபாநாயகரிடம் காங்கிரஸ் கடிதம் கொடுத்திருந்தது. இதன் மீது வரும் 22ம் தேதி விசாரணை நடத்துவதாக கூறிய சபாநாயகர், தற்போது அந்த தேதியை திடீரென ஜூன் 18ம் தேதிக்கு (நேற்று) மாற்றி இருக்கிறார். இதனால் பாரபட்சமாக செயல்படும் சபாநாயகரை நீக்கக்கோரி பேரவை செயலாளரிடம் காங்கிரஸ் எம்எல்ஏ மேக சந்திரா நேற்று நோட்டீஸ் அளித்தார்.

Related Stories: