கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாறும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம்: துணை வேந்தர் சூரப்பாவிற்கு மாநகராட்சி கடிதம்..!!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கொரோனா மையமாக மாறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவி வருவதால் அண்ணா பல்கலைக்கழகத்தை கொரோனா மையமாக மாற்றுவதாக மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ஏற்கனவே சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் சில கல்லூரிகள் இருக்கின்ற நிலையில் அதில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு தனிமைப்படுத்தி உள்ளனர்.

அந்த அடிப்படையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்றுவதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பாவிற்கு மாநகராட்சி சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் வருகின்ற ஜூன் 20ம் தேதிக்குள் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாக விடுதிகளில் மாணவர்கள் தங்கியிருந்தால் அவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்படும் மையமாக அண்ணா பல்கலைக்கழகம் மாறுவதால் அதற்கான செலவை மாநகராட்சியே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனாவின் தாக்கம் குறைந்த பிறகு எப்படி அண்ணா பல்கலைக்கழகம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படுகிறதோ அதே நிலையில் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மிகப்பெரிய வளாகம் என்பதால் அங்கு நோயாளிகளை தங்கவைக்க வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,193-ஆக அதிகரித்துள்ள நிலையில்  சென்னையில் மட்டும் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,556 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 79 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 21,990 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: