சென்னையில் கடுமையாகிறது கட்டுப்பாடு; அண்ணாசாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் மூடப்படும்: ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைக்க காவல் ஆணையர் வேண்டுகோள்

சென்னை: சென்னை மாநகரில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் இன்று நள்ளிரவு முதல் வரும் 30ம் தேதி வரை அதாவது 12 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு விதிக்கப்பட்ட தளர்வுகளை இந்த முறை கடைபிடிக்காமல் 144 தடை உத்தரவுப்படி முழுமையாக 4 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்த தமிழக அரசு சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே  தமிழக காவல் துறையில் முதல் முறையாக கொரோனா பாதிப்பால் தீவிர சிகிச்சை பெற்று வந்த சென்னை மாம்பலம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பாலமுரளி நேற்று உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து கொரோனாவால் உயிரிழந்த சென்னை காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தது பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன் சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.  முழு ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கூறினார் மேலும் பேசிய அவர்;

* மக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்திற்குள் உள்ள கடைக்கு மட்டுமே செல்லலாம்

* காய்கறி, மளிகை பொருட்களை வாங்க வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படாது

* ரயில் நிலையம், விமான நிலையம் செல்ல வாகனங்களுக்கு தனியே அனுமதி; அனுமதி இல்லாமல் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்

* வெளி மாவட்டத்தில் இருந்து வந்து செல்லும் தொழிலாளர்கள் தினசரி வந்து செல்ல அனுமதியில்லை.

* தேவையின்றி வெளியில் வருவோரை கண்காணிக்க டிரோன் பயன்படுத்தப்படும்

* சென்னை மாநகருக்குள் 288 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

* போலி இ பாஸ் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

* முழு ஊரடங்கில் 16,000 காவலர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்; தேவைப்பட்டால் அதிகமாக பயன்படுத்தப்படுவார்கள்.

* அனுமதிக்கப்பட்ட 33% ஊழியர்களுக்கு அடையாள அட்டை போதுமானது

* அண்ணாசாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் மூடப்படும்

* வழக்கமான போக்குவரத்திற்கு சென்னை சாலைகளில் அனுமதியில்லை

* அறிவுரை சொல்லி அனுப்பியதால் கடந்த முறை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை

* முகக்கவசம் அணியாமல் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

* திருமணம், இறப்பு தவிர வேறு எதற்கும் முன் அனுமதி பெற்றிருந்தால் ரத்து

* கடந்த ஊரடங்குகளின் போது பெறப்பட்ட இ-பாஸ்கள் செல்லுபடியாகாது, இம்முறை புதிதாக இ-பாஸ் பெற வேண்டும்

* சமூக இடைவெளி, நேரக்கட்டுப்பாட்டை கடைபிடிக்காத கடைகள், மார்க்கெட் மூடப்படும்

* உரிய காரணங்களின்றி வெளியே சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்

* கடை உரிமையாளர்கள் பொதுமக்கள் கைகளை கழுவ சோப்பு தண்ணீர் சானிடைசர் வைக்க  வேண்டும்

* நோய் தீவிரம் அடைந்துள்ளதால் மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகிறோம் எனவும் கூறினார்.

Related Stories: