கொரோனாவுக்கு பலியான மாம்பலம் காவல் ஆய்வாளர்!: இன்று மாலை 5 மணிக்கு அனைத்து காவல் துறையினரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த டிஜிபி திரிபாதி வேண்டுகோள்!

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சென்னை மாம்பலம் காவல்துறை ஆய்வாளர் பாலமுரளிக்கு இன்று மாலை 5 மணிக்கு காவல்துறையினர் மவுன அஞ்சலி செலுத்துகின்றனர். தமிழகம் முழுவதும் அனைத்து காவல்துறையினரும் பணி இடத்தில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளராக இருந்த பாலமுரளிக்கு கடந்த 4ம் தேதி கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக கிண்டி ஐஐடி தனிமைப்படுத்துதல் முகாமில் சேர்க்கப்பட்ட அவர், ஏற்கனவே நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், 6ம் தேதி பாலமுரளிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 9ம் தேதி இரவு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். ஆய்வாளர் மரண செய்தி அறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வழியாக பாலமுரளியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆய்வாளரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, உயிரிழந்த பாலமுரளியின் உடலுக்கு 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. பாலமுரளியின் உடல் வைக்கப்பட்டிருந்த அமரர் ஊர்தியுடன் காவல்துறை வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இறுதியில் தி.நகர் கண்ணம்மாபேட்டை மயானத்தில் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின் படி, காவல் ஆய்வாளர் பாலமுரளியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரது திருவுருவ படத்திற்கு சென்னை மாம்பலம் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மறைந்த ஆய்வாளர் பாலமுரளிக்கு தமிழகம் முழுவதும் காவல்துறையினர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த டிஜிபி வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: