80 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பென்னா நதி வெள்ளப்பெருக்கில் மணல் திட்டில் புதைந்த கோயில்

இளைஞர்கள் ஒன்று திரண்டு வெளியே கொண்டு வந்தனர்

திருமலை: நெல்லூர் அருகே 80 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பென்னா நதி வெள்ளப்பெருக்கால் நாகேஸ்வர சுவாமி கோயில் மணல் திட்டுகளால் புதைந்தது. இக்கோயிலை தற்போது இளைஞர்கள் ஒன்று திரண்டு வெளியே கொண்டு வந்தனர். ஆந்திரா, நெல்லூர் மாவட்டம், சேஸர்லா மண்டலம், பெருமல்லபாடு கிராமத்தில் 80 ஆண்டுகளுக்கு முன்பு பென்னா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கிராமம் முழுவதும் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் அங்கிருந்த கிராமவாசிகள் இரண்டு மைல் தொலைவில் வந்து வீடுகளை கட்டிக்கொண்டு வசித்து வருகின்றனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்தில் காலப்போக்கில் 35 அடி உயரத்திற்கு மணல் திட்டு உயர்ந்தது.

இதில் ஆற்றங்கரையில் இருந்த நாகேஸ்வர சுவாமி கோயிலும் புதைந்தது. இந்த கோயிலை எப்படியாவது வெளி உலகிற்கு கொண்டு வந்து பழையபடி பூஜைகளை மேற்கொள்ள வேண்டும் என பல ஆண்டுகளாக கிராம மக்களின் எண்ணத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கால் வெளி மாநிலம், வெளி ஊர்களில் வேலைக்கு சென்றவர்கள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு வந்ததால் தங்களது முன்னோர்கள் கூறியபடி மணல் திட்டில் புதைந்த நாகேஸ்வர சுவாமி கோயிலை வெளியே கொண்டு வர வேண்டும் என முடிவுசெய்தனர்.

அதன்படி, 35 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து குழுவாக உருவாகி சந்தா வசூல் செய்து அரசு அனுமதியுடன் பொக்லைன் மூலம் மணல் திட்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் தற்போது 80 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு மணலில் புதைந்த கோயிலின் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவர் வெளியே கொண்டு வரப்பட்டதால் கிராம மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் கீதவாணி உள்ளிட்ட அதிகாரிகள் நாகேஸ்வர சுவாமி கோயில் பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.

Related Stories: