முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை வளர்ப்பு முறை குறித்து பாகன்களுக்கு பயிற்சி

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை வளர்ப்பு முறை குறித்து பாகன்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.   இந்த ஒரு நாள் பயிற்சி முகாம் ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையில் அளிக்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு, பாம்பேக்ஸ், ஈட்டி மரம் ஆகிய மூன்று இடங்களில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் குட்டி யானைகள், கும்கி யானைகள், சவாரி யானைகள் மற்றும் ஓய்வு பெற்ற யானைகள் உள்ளன. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கும்கி யானைகள் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி கிராமங்களுக்குள் புகுந்து பொது மக்களை தாக்கும் காட்டு யானைகளை விரட்டுவதிலும், அவற்றை பிடிப்பதிலும் திறமை வாய்ந்தது. யானைகளுக்கு பயிற்சி வழங்குவதில் திறமையான பாகன்கள் இங்குள்ளனர்.

மேலும் புதிதாக பாகன்கள் மற்றும் காவடிகள் (உதவியாளர்கள்) பணியில் சேர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக யானைகள் பராமரிப்பு, பயிற்சி அளிக்கும் முறை, கும்கி யானைகளை பயன்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து நேற்று ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. யானைகளைத் கொண்டு செயல்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது. பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில், அவ்வப்போது பயிற்சிகள் அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: