இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்தது எப்படி? கோபத்தில் உள்ள நாட்டு மக்களுக்கு உண்மையை பிரதமர் கூற வேண்டும்: சோனியா, ராகுல் வலியுறுத்தல்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் பேசியதாவது: காங்கிரஸ் எப்போதும் இந்திய ராணுவத்துக்கும், அரசுக்கும் ஆதரவாக துணை நிற்கும். இந்த சவாலான நேரத்தில் ஒட்டு மொத்த நாடும் ஒன்றிணைந்து எதிரியை எதிர்கொள்ளும். எல்லையில் என்ன நடக்கிறது எனபதை நாட்டு மக்களுக்கு  தானாக முன் வந்து உண்மையை கூற வேண்டும் என பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். நெருக்கடியான இந்த தருணத்தில், உண்மைகளை அவர் உறுதிபடுத்த வேண்டும்.  இந்திய எல்லையில் சீன ராணுவம் ஊடுருவிய விஷயத்தில் நாட்டு மக்கள் கோபத்தில் உள்ளனர்.

இந்த நேரத்தில் பிரதமர் மோடி வெளியே வந்து சீனர்கள் இந்திய பிராந்தியத்தை எவ்வாறு ஆக்கிரமித்தனர்? தைரியமிக்க நமது வீரர்கள் எவ்வாறு வீரமரணம் அடைந்தனர்? தற்போதைய நிலை என்ன? என்பது குறித்த உண்மைகளை தெரிவிக்க வேண்டும் என்றார்.இதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது வீடியோ பதிவில், “பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார்? நீங்கள் எங்கே ஒளிந்து கொண்டு இருக்கிறீர்கள்? நீங்கள் வெளியே வரவேண்டும். இந்த ஒட்டு மொத்த நாடே ஒன்றிணைந்து உங்களுக்கு பின்னால் உள்ளது. எனவே, வெளியே வந்து நாட்டு மக்களுக்கு உண்மையை சொல்லுங்கள். பயப்படாதீர்கள்,’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: