லடாக் எல்லை நிலவரம் தொடர்பாக நாளை அனைத்து கட்சி கூட்டம்: பிரதமர் மோடி தலைமையில் ஏற்பாடு

புதுடெல்லி: லடாக் எல்லை நிலவரம் தொடர்பாக நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு  பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். லடாக் பிராந்திய எல்லையில் இந்தியா- சீனா இடையே  கடந்த 6 வார காலமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த மாதம் 5ம் தேதி  இரு நாட்டு ராணுவ வீரர்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.  இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு கல்வான்  பள்ளத்தாக்கில் பிபி-14 என்ற பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் மீண்டும்  கடுமையாக மோதிக் கொண்டனர். சீன படையினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி  நுழைந்ததால், கைகலப்பில் ஈடுபட்டதாக ராணுவம் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு முதல் அதிகாலை வரை நீடித்த இந்த கைகலப்பில்  சீன படையினர் கற்கள், இரும்பு ராடுகள் கொண்டு மூர்க்கமாக தாக்கி உள்ளனர்.  இதில், இந்திய தரப்பில் தமிழக வீரர் பழனி உட்பட 20 வீரர்கள் வீரமரணம்  அடைந்தனர். சீனா தரப்பில் 43 பேர் பலி மற்றும் படுகாயமடைந்ததாக  கூறப்படுகிறது.

இந்த மோதல் காரணமாக, இந்தியா -  சீனா எல்லையில்  மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்திய தரப்பில் முதலில் 3 வீரர்கள்  பலியானதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் 20 பேர் பலியானதாக ராணுவம் உறுதி  செய்தது. இதனால், லடாக் எல்லையின் கள நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு  மக்களுக்கு விளக்க வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  வலியுறுத்தின.

இதை ஏற்று, அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு  ஏற்பாடு செய்துள்ளது. நாளை மாலை 5 மணிக்கு இக்கூட்டம் பிரதமர் மோடி  தலைமையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்படும் என பிரதமர் அலுவலகம்  தெரிவித்துள்ளது.

லடாக் நிலவரம் தொடர்பாக வெளியுறவுத் துறை  அமைச்சர் ஜெய்சங்கரிடம் தகவல்களை கேட்டறிந்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்  சிங், நேற்று மீண்டும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், சீன  வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, அமைச்சர் ஜெய்சங்கரை போனில் தொடர்பு  கொண்டு பேசி உள்ளார். லடாக் எல்லையில் இதற்கு மேல் மோதலை வளர்க்க  விரும்பவில்லை என சீனா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: