ஜூன் 22 முதல் இலவச பாட புத்தகங்கள் வழங்கலாம்...! அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: ஜூன் 22 முதல் 30க்குள் இலவச பாடபுத்தகங்களை பள்ளிகளில் கொண்டு சேர்க்க பள்ளிக்கல்வித்துறை  உத்தரவிட்டுள்ளது. உரிய முன்னெச்சரிக்கையுடன் புத்தகம் அனுப்பும் பணி மேற்கொள்ள கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அதே சமயம், இந்த பாடப் புத்தகங்களை கிடங்குகளில் இருந்து ஒவ்வொரு பள்ளிகளுக்கும் வரும் 22-ந் தேதி முதல் எடுத்துச் சென்று வினியோகம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வரும் 30-ந் தேதிக்குள் பணிகளை முடிக்க கோரியுள்ளார். தமிழகம் முழுவதும் மொத்தம் 2 கோடிக்கும் அதிகமான பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மாவட்டக் கல்வி அலுவலர்களால் பள்ளியில் வழங்கப்படும் பாடப்புத்தகங்கள் பள்ளிக்கு தேவையான எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளதா என்பதை தலைமையாசிரியர்கள் சரிபார்த்து கொள்ளவேண்டும். குறைவாக பெறப்படுமாயின் அந்த தகவலை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவருக்கு தெரிவித்து பள்ளி துவங்குவதற்கு முன்னர் அவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இப்பணிகளை மேற்கொள்வதற்கான போக்குவரத்து செலவினங்கள் இவ்வியக்ககம் மூலம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் விரைவில் வழங்கப்படும்.

மாவட்டக் கல்வி அலுவலர்களால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள வழித்தடங்களில் எந்தெந்த தேதியில் எந்தெந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்ற விவரத்தை முன்னதாகவே தலைமையாசிரியருக்கு தெரிவித்து வழங்கவிருக்கும் பாடநூல்களை கொண்டு செல்லும்போது தலைமையாசிரியரை பள்ளியில் இருக்க அறிவுரைவழங்க வேண்டும். பணிகளை மேற்கொள்ளும் போது கொரோனா நோய்தொற்று ஏற்படாதவகையில் சமூக விலகலைக் கடைபிடித்து, அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றுவதுடன் பணியாளர்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து பணிபுரிவதை முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்கள் கண்டிப்பாக கண்காணிக்குமாறும் , அனைத்து முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories: