கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழக அரசால் வாங்கப்பட்ட Hi-Flow ஆக்சிஜன் கருவிகள் பயன்பாட்டுக்கு வந்தது!

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழக அரசால் வாங்கப்பட்ட ஹை புளோ ஆக்சிஜன் கருவிகள்  சென்னையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதிகளவிலான மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழக அரசால் வாங்கப்பட்ட ஹை புளோ ஆக்சிஜன் கருவிகள் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இருதய பிரச்சனை, நீரிழிவு, நுரையீரல் பாதிப்பு, சிறுநீரக கோளாறு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் பட்சத்தில் அதிகளவிலான மூச்சுத்திணறல் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. அவ்வாறு பாதிக்கப்படுவோரில் 50 வயதை கடந்தவர்கள் உயிரிழக்க நேர்கிறது. இந்நிலையில் அதுபோன்ற உயிரிழப்புகளை தடுப்பதற்காக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மூலம் ஹை புளோ ஆக்சிஜன் கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது.

முதற்கட்டமாக தலா 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 100 கருவிகள் வாங்கப்பட்டு, சென்னை ஓமந்தூரார், ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் உட்பட பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கும் 14 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, நிமிடத்திற்கு 5 முதல் 10 லிட்டர் வரையிலான ஆக்சிஜன் வழங்கும் கருவிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது வாங்கப்பட்டுள்ள புதிய கருவிகள் மூலம் தடையின்றி நிமிடத்திற்கு 50 முதல் 60 லிட்டர் வரை ஆக்சிஜன் செலுத்த முடியும். இதன் மூலம் உயிரிழப்புகளை குறைக்க முடியும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories: