வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்தில் நேதாஜி மார்க்கெட் சில்லறை காய்கறி கடைகள் இயங்கின: வாடிக்கையாளர் வருகை இல்லை, வியாபாரிகள் வேதனை

வேலூர்: வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்தில் நேதாஜி மார்க்கெட் சில்லறை கடைகள் இன்று இயங்கின. வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் அதிகளவில் கூட்டம் கூடுவதால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சில்லறை கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டது. மொத்த விற்பனை கடைகள் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். மேலும் சில்லறை வியாபாரிகளுக்கு வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடைகள் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது.

ஆனால் சில்லறை வியாபாரிகள் அங்கு போதிய வசதிகள் இல்லை என்று கூறி நேதாஜி மார்க்கெட்டிலேயே கடைகள் அமைத்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் புகாரின்பேரில் வேலூர் வடக்கு போலீசார் நேற்று தடை மீறி கடைகள் திறந்த வியாபாரிகளை விரட்டியடித்தனர். மேலும் தடை மீறி கடைகள் திறந்தால் சீல் வைப்பதோடு, நோய் தொற்று பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரித்தனர். இதனால் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் சில்லறை வியாபாரிகள் இன்று கடைகளை திறந்தனர். மேலும் பூ வியாபாரிகள் பூக்கள் வெயிலில் வாடாமல் இருக்க நிழற்கூரைகள் அமைத்து கொண்டனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘நேதாஜி மார்க்கெட்டில் 150 சில்லறை காய்கறி கடைகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 70 வியாபாரிகள் இன்று வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கடைகள் வைத்துள்ளனர். சுமார் 100 பூக்கடைகள் உள்ள நிலையில் மாலை விற்பனை செய்யும் 26 கடைகள், உதிரி பூக்கள் விற்பனை செய்யும் 35 பேர் முதற்கட்டமாக இன்று கடைகள் திறந்துள்ளனர். பூக்கள் வாடாமல் இருப்பதற்காக தற்காலிக நிழற்கூரைகளை சொந்த செலவில் அமைத்துள்ளனர். தொடர்ந்து படிப்படியாக சில்லறை வியாபாரிகள் வருவார்கள்.

இன்று வாடிக்கையாளர்கள் கூட்டம் இல்லாததால், விற்பனை சரிவர நடக்கவில்லை’ என்றனர். மொத்த வியாபாரிகள் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 7 மணிக்கு பிறகு வேலூர் நேதாஜி மார்க்கெட் வெறிச்சோடியது.

Related Stories: