சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது: 28ம் தேதி தரிசன விழா

சிதம்பரம்: உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மற்றும் மார்கழி மாதங்களில் தேரோட்டம் மற்றும் தரிசன விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக்கோரி சிதம்பரம் நடராஜர் கோயிலை சேர்ந்த பாஸ்கர தீட்சிதர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் இதுவரை அதன் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதையடுத்து தரிசன விழாவை ஊரடங்கு காரணமாக கோயிலுக்குள்ளேயே நடத்த தீட்சிதர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இந்த ஆண்டு ஆனி திருமஞ்சன தரிசன விழா வருகிற 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்றிலிருந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 27ம் தேதி நடைபெற வேண்டும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கோயிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் தேரோட்டம் நடப்பதற்கு வாய்ப்பில்லை.

27ம் தேதி அன்று இரவு கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் லட்சார்ச்சனை நடைபெறும். மறுநாள் 28ம் தேதி அதிகாலை மகா அபிஷேகமும், அதைத்தொடர்ந்து நடராஜர், சிவகாம சுந்தரிக்கு ஆடை அலங்காரம், ஆபரண அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு ஆனி திருமஞ்சன திருவிழா தரிசனம் நடைபெற உள்ளது. பொதுமுடக்கம் காரணமாக அனைத்து நிகழ்ச்சிகளையும் கோயிலுக்குள்ளேயே நடத்துவதற்கு தீட்சிதர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக வருவாய்த்துறை நடத்தும் வழக்கமான ஆலோசனை கூட்டத்தில்தான் எப்படி திருவிழா நடைபெறும் என்பது குறித்து இறுதி முடிவு எட்டப்படும் என தெரிகிறது.     

Related Stories: