திருப்போரூர் ஒன்றியம் வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

திருப்போரூர்: வரும் 9ம் தேதி முதல் 30ம் தேதி வரை அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை, திருப்போரூர் ஒன்றியம் வரை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததையடுத்து தமிழக அரசு, வரும் 19ம் தேதி முதல் 30 தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மறைமலைநகர் நகராட்சிகள், கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர் ஆகிய பேரூராட்சிகளிலும், சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில் அடங்கிய கானத்தூர், முட்டுக்காடு ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திருப்போரூர் ஒன்றியம் படூர், பொன்மார், மேலக்கோட்டையூர், திருப்போரூர் பேரூராட்சியில் அடங்கிய காலவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளில் தனிமைப்படுத்தல் முகாம் செயல்படுகிறது. மேலக்கோட்டையூர் காவலர் வீட்டு வசதிக் கழக குடியிருப்பில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது.  சென்னையை ஒட்டிய நாவலூர், தாழம்பூர், படூர், கேளம்பாக்கம், கண்டிகை, மாம்பாக்கம், பொன்மார், கோவளம் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளனர்.மேலும், கழிப்பட்டூர், படூரில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.

இந்த வேளையில், திருப்போரூர் ஒன்றியத்துக்கு ஊரடங்கு விலக்கு அளிக்கப்பட்டால், இங்கு செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, குடிமகன்கள் வந்து கொரோனாவை பரப்பும் அபாயம் உள்ளது. எனவே, திருப்போரூர் பேரூராட்சி மற்றும் ஒன்றியத்தில் அடங்கிய கிராமங்களிலும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: