பிரதமர் மோடியை விமர்சித்ததால் தேச துரோக வழக்கில் பத்திரிகையாளர் வினோத் துவாவை கைது செய்ய ஜூலை 6 வரை தடை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: தேசத் துரோக வழக்கில் பத்திரிகையாளர் வினோத் துவாவை இமாச்சல் போலீசார் ஜூலை 6ம் தேதி வரை கைது செய்ய தடை உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. டெல்லியில் கடந்த மார்ச் 30ம் தேதி நடந்த மதக் கலவரம் தொடர்பான 15 நிமிட வீடியோவை `யூடியூப்’ சேனலில் பதிவேற்றம் செய்து மதக் கலவரத்தை தூண்டியதாகவும் பிரதமர் மோடி பற்றி அவதூறாக, பொய்யான தகவல்களை கூறியதாகவும் மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீது டெல்லி பாஜ தலைவர் அஜய் ஷியாம் புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. டெல்லி உயர் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை வரும் 23ம் தேதி ஒத்தி வைத்து கடந்த புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.இதனிடையே, மதக் கலவரத்தில் நடந்த தாக்குதல்களையும் உயிரிழப்புகளையும் காட்டி பிரதமர் மோடி ஓட்டுகளை பெறுவதாக துவா கூறியதாக சிம்லா பாஜ தலைவர் அளித்த புகாரின்பேரில், சிம்லா போலீசார் அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அவருக்கு கடந்த வியாழக்கிழமை சம்மன் அனுப்பப்பட்டது.

உடல் நலம், வயது, கொரோனா தொற்று காரணமாக தற்போது வர முடியாது என்று அவர் சிம்லா போலீசாரிடம் தெரிவித்தார். இந்நிலையில், இந்த வழக்கை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான விடுமுறை அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது தேசத் துரோக வழக்குகள் பதியப்படுவதால், பத்திரிகையாளர்களின் அடிப்படை பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் ஆகியவற்றுக்கு தடை விதிக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சிப்பதாக, துவா தரப்பு வக்கீல் விகாஸ் சிங் தெரிவித்தார்.  அப்போது துவாவை சிம்லா போலீசார் ஜூலை 6ம் தேதி வரை கைது செய்ய தடைவிதிப்பதாகவும் இவ்வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 2 வாரங்களில் பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்பு, இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள் இவ்வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

Related Stories: