ஊரடங்கால் குமரியில் தேன் உற்பத்தி பாதிப்பு: ஆராய்ச்சி மையம் அமைக்க கோரிக்கை

மார்த்தாண்டம்: தென்னிந்தியாவில் அதிகம் தேன் உற்பத்தி ஆகும் இடமாக குமரி மாவட்டம் மார்த்தாண்டம் விளங்கி வருகிறது. மார்த்தாண்டம் தேனுக்கு பொதுமக்களிடம் அதிக மவுசு உள்ளது. குறிப்பாக குமரி மேற்கு மாவட்டத்தில் விளவங்கோடு, கல்குளம், கிள்ளியூர் தாலுகாக்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தேனி வளர்ப்பை முழு நேரமாகவும், பலர் பகுதி நேரமாகவும் செய்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 15 லட்சம் கிலோ தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் தேன் மெழுகு வார்னீஷ், முக அழகு கிரீம் உள்ளிட்ட பொருட்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. தேனீ வளர்ப்பால் மகரந்த சேர்க்கை மூலம் பயிர்களில் அதிக மகசூலும் கிடைக்கிறது.

ஆனால் சமீபகாலமாக தேனீ வளர்ப்பு நலிவடைந்து வரும் தொழிலாக மாறி வருகிறது. தேனீக்களை தாக்கும் வைரஸ் நோயால் தேன்கூடுகளை அதிகப்படுத்தி வருவாயை உயர்த்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். மேலும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மழைக்காலங்களில் தேனீக்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. இதனால் தேனீக்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனால் 1:1 என்ற விகிதத்தில் சீனி அல்லது சர்க்கரையுடன் தண்ணீர் கலந்து தேனீக்களுக்கு கொடுக்கின்றனர். இதனால் தேனீ வளர்ப்போருக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே மானிய விலையில் சீனி அல்லது சர்க்கரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.

இதுபோல குமரியில் ஜனவரி முதல் மே வரை கோடைக்காலம் என்பதால் தேனீ வளர்ப்போர் தேன் கூடுகளை கேரளம், கர்நாடகம் போன்ற மாநிலங்களுக்கு கொண்டு சென்று விடுகின்றனர். பின்னர் ஜூன், ஜூலை மாதங்களில் குமரி மாவட்டம் கொண்டு வந்து தேன் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக தேனீ விவசாயிகள் தங்கள் தேன்கூடுகளை கேரளம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தேனீ விவசாயிகள் வருமானமின்றி வறுமையால் வாடி வருகின்றனர். ஏற்கனவே பருவநிலை மாற்றம் காரணமாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில்,

தற்போது மேலும் பாதிப்பு அதிகரித்து உள்ளதாக இவர்கள் கூறுகின்றனர். எனவே தேனீ விவசாயிகளுக்கு  எளிய முறையில் கடனுதவி வழங்க வேண்டும். மேலும் குமரி மாவட்டத்தில் தேனீ ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Stories: