கொரோனா பரிசோதனை செய்தாலே குடும்பத்தினர் அனைவருக்கும் 14 நாள் தனிமை: சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை: கொரோனா பரிசோதனை செய்தாலே செய்பவர் உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.   ஐசிஎம்ஆர் அனுமதியுடன் செயல்பட்டுவரும் பரிசோதனை மையங்களில் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையர் பிரகாஷ் தலைமையில் ேநற்று நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பிறகு, சென்னை மாநகராட்சியில் இனி பரிசோதனை மேற்கொள்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தபடுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது :

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி பெற்ற 30 பரிசோதனை மையங்கள் உள்ளன.  

இவற்றில் 12 அரசு பரிசோதனை மையங்களும், 18  தனியார் பரிசோதனை மையங்களும் உள்ளன. இம்மையங்களில் பரிசோதனைக்கு வரும் நோயாளிகளின் விவரங்கள் மற்றும் தகவல்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பல்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது.  மையங்களில் பரிசோதனை செய்து கொள்ள வருகை தரும் நோயாளிகளின் விவரங்கள் மற்றும் தகவல்களை அதற்கென உருவாக்கப்பட்டுள்ள கைபேசி செயலி மற்றும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல், சோதனை செய்ய வருபவர்களின் பெயர், அவரின் முழு முகவரி, வயது, பாலினம், அவர்களின் தொழில் விவரம் மற்றும் குடும்பத்தினர், கடந்த 15 நாட்களில் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களின் விவரங்கள் ஆகியவற்றினை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.   

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளின் பரிசோதனை மையங்களில் இனி  கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டாலே, பரிசோதனை மேற்கொள்ளும் நபர்  மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் 14 நாட்கள்  தனிமைப்படுத்தப்படுவார்கள். இவ்வாறு அந்தக் கூட்டத்தில் ஆணையர் பிரகாஷ் பேசினார்.

அச்சம் தரும் உத்தரவு

சென்னையில் சோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவரும் நிலையில் மாநகராட்சியின் இந்த உத்தரவு பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவை பார்த்தாலே இனிமேல் யாரும் பரிசோதனை செய்ய முன்வரமாட்டார்கள் என்றும் இதனால் நோய் தொற்றை விரைந்து கண்டுபிடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டு அதிக அளவில் மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: