அசாமில் 14 நாட்களாக எரிவாயு கசிவு: எண்ணெய் கிணற்றில் பயங்கர தீ

* 6,000 மக்கள் வெளியேற்றம்

*2 தீயணைப்பு வீரர்கள் பலி

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக எரிவாயு கசிவு ஏற்பட்டுவந்த நிலையில் நேற்று முன்தினம் எண்ணெய் கிணற்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மீட்பு பணியில் ஈடுபட்ட இரண்டு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள பக்ஜன் என்ற இடத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிவாயு உற்பத்தி கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் கடந்த 14 நாட்களாக எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் முயற்சியில் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக நேற்று முன்தினம் எரிவாயு கிணற்றில் தீப்பற்றியது. இதன் காரணமாக அந்த பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.

தீயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதன் அருகில் செல்ல முடியவில்லை என்றும், சுமார் 10 கிமீ தூரத்தில் இருந்து தான் பார்க்க முடிவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து கிணற்றில் இருந்து எரிவாயு கசிந்துகொண்டே இருப்பதால் தீயின் தீவிரம் அதிகரித்து வருகின்றது. எண்ணெய் கிணறு அமைந்துள்ள இடத்தை சுற்றி சுமார் 1.5கி.மீ. தூரத்துக்கு வசித்த சுமார் 6ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ரூ-30ஆயிரம் வழங்கப்படும் என்று இந்திய ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. 3கி.மீ. தொலைவு வரை இருந்த விவசாய நிலைங்கள், நீர் நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. திப்ரு தேசிய பூங்காவில் உள்ள நீ்ர்வாழ் உயிரினங்கள், டால்பின்கள் உள்ளிட்டவை இறந்து மிதக்கும் படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதனிடையே. ஆயில் நிறுவனத்தின் தீயணைப்பு துறை வீரர்கள் இருவர் காணவில்லை என தேடப்பட்டு வந்த நிலையில் தீப்பற்றி எரியும் கிணற்றின் அருகே உள்ள ஈர நிலத்தில் இறந்து கிடந்தனர்.

Related Stories: