மதுவுக்கு பதில் சானிடைசரை நிரப்பிய தயாரிப்பு நிறுவனம்: விக்காதீங்க என அலறுகிறது

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் மது தயாரிப்பு நிறுவனம் அப்போலோ பே டிஸ்டில்லர். இந்நிறுவனம் பல்வேறு மது வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், தன்னுடைய ‘எஸ்எஸ் கேசினோ’ பெயரிலான டிரை ஜின் பாட்டில்களை விற்பனைக்காக அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில், அந்த பாட்டிலில் மதுவுக்கு பதிலாக கைகளை சுத்தப்படுத்த பயன்படுத்தும் கிருமி நாசினி (சானிடைசர்) நிரப்பப்பட்டது தற்செயலாக ஒரு ஊழியரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், மது நிறுவனங்கள் தங்களுடைய ஆலைகளில் ஆல்கஹாலுடன் கூடிய கிருமி நாசினியை தயாரித்து வருகின்றன.

ஏனெனில், அவர்களிடம் ஆல்கஹால் இருப்பதால், கிருமி நாசினி தயாரிப்பு எளிதாக இருப்பதுடன், தற்போது அதற்கு கடும் தேவை ஏற்பட்டுள்ளதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். ஊழியர் கண்டுபிடித்து சொன்னதை தொடர்ந்து அலறியடித்த மது நிறுவனம், உடனடியாக அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் அவசர சுற்றறிக்கை அனுப்பியது. அதில், ‘எஸ்எஸ் கேசினோ பிராண்டில் வந்த ஜின் (மது வகைகளில் ஒன்று) விற்பனை செய்ய வேண்டாம். அதை உடனடியாக நிறுவனத்துக்கு திருப்பி அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்,’ என்று கூறப்பட்டிருந்தது.

மேலும், அந்நிறுவனத்தின் பிரதிநிதிகள், தங்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் விசாரணை நடத்தியதில், விக்டோரியா நகரில் மட்டும் 7 பாட்டில்கள் விற்பனை ஆகியிருந்தது தெரியவந்தது. அதை வாங்கியவர்களை கண்டுபிடிக்கும் பணியை நிறுவனம் முடுக்கிவிட்டுள்ளது.

Related Stories: