மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தேவகவுடா மனு தாக்கல்

பெங்களூரு: கர்நாடகாவில் இருந்து  மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  ராஜுகவுடா, பி.கே.ஹரிபிரசாத், பாஜ சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரபாகர் கோரே மற்றும் மஜத சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட குபேந்திரரெட்டி  ஆகிய நான்கு ேபரின் பதவி காலம் இம்மாதம் முடிகிறது. காலியாகும் இப்பதவிக்கு  ஜூன் 19ம் தேதி தேர்தல் நடத்துவதாக கடந்த மாதம் 30ம் தேதி இந்திய தலைமை  தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதை தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல் வேட்புமனு  தாக்கல் தொடங்கியது. சட்டபேரவையில்  மஜதவுக்கு போதிய பலமில்லாமல் இருப்பதால், அக்கட்சி சார்பில் வேட்பாளரை  நிறுத்துவது குறித்து யோசிக்கப்பட்டது. தேவகவுடா போட்டியிடுவார் என  கூறப்பட்டும் அவர் மவுனமாக இருந்தார். இந்நிலையில், மஜத எம்எல்ஏக்கள்  மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் விருப்பத்தை ஏற்று  கொண்டுள்ள தேவகவுடா, தேர்தலில் போட்டியிட சம்மதம் தெரிவித்தார். அதை  தொடர்ந்து நேற்று அவர் மனு தாக்கல் செய்தார்.

இதே போன்று பாஜ வேட்பாளர்கள் ஈரண்ணா கடாடி மற்றும்  அசோக் கஸ்தி ஆகியோர்  மனு தாக்கல் செய்தனர். வேட்புமனு  தாக்கல் நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று மனுக்கள் பரிசீலனை நடக்கிறது.  தேவகவுடா,  காங்கிரஸ் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பாஜ.வின் ஈரண்ணா  கடாடி, அசோக் கஸ்தி மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டால், நான்கு  பேரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.

Related Stories: