தேங்கி நிற்கும் கழிவுநீர், நிழற்குடை சேதம்; அடிப்படை வசதியில்லாத எரிச்சநத்தம் கிராமம்: மக்கள் கடும் அவதி

சிவகாசி: சிவகாசி அருகே எரிச்சந்தம் கிராமத்தில் அடிப்படை வசதி இல்லாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்களை தேடி அரசு என்ற வெற்று விளம்பரம் மூலம் ஆளும் அதிமுக அரசு இயங்கி வருகிறது. குறிப்பாக சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் அரசை தேடி மக்கள் சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. நடையாய் நடந்தும் அதிகாரிகள் கவனம் இன்றும் கிராம புறங்களின் மீது விழுவதில்லை. பாதிக்கப்பட்ட கிராமங்கள் வரிசையில் சிவகாசி அருகே எரிச்சநத்தம் கிராமமும் இணைந்துள்ளது. நடையனேரி, கொத்தனேரி, செவலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மைய பகுதியாக எரிச்சநத்தம் உள்ளது.

சுற்றுப்பகுதி கிராம மக்கள் எரிச்சநத்தம் வந்துதான் சிவகாசி, விருதுநகர் நகரங்களுக்கு செல்ல முடியும். இதனால் எரிச்சநத்தம் பஸ் ஸ்டாபில் எப்போதும் பயணிகள், பஸ்சுக்காக காத்திருப்பதை காணமுடியும். வளர்ச்சி அடையும் கிராமம் வரிசையில் எரிச்சநத்தம் இருக்கும் என்று கிராம மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அதிகாரிகளின் ஆர்வமின்மையால் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இன்றி இக்கிராமம் தவித்து வருகிறது. மெயின் ரோட்டோரம் உள்ள ஊரணி கழிவுநீர் குளமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. பல தெருக்களில் வாறுகால் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது.

மாசானியம்மன் கோயில் அருகே உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்துள்ளது. அரசு அதிகாரிகள் இந்த வழியாக சென்று வந்த போதிலும் கிராமத்திற்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் தவிக்க விடுவது ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து பணிபுரிவதை தவிர்த்து ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்தாலே அரசின் மீதான அதிருப்தி குறையும். அந்த வகையில் எரிச்சநத்தம் கிராமத்திற்கு அதிகாரிகள் விசிட் அடித்து நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories: