சொந்த ஊர்களுக்கு சென்ற 165 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடு: தனி பஸ்களில் அழைத்து வரப்பட்டனர்

நெல்லை:  கொரோனா தொற்று பரவல் காரணமாக இருமுறை ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 15ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் 28 ஆயிரத்து 33 பேர் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர். இவர்களில் 165 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர். இவர்களில் 115 பேர் சொல்வதை எழுதும் திறன் உள்ளவர்கள். மற்றவர்களுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம்  அளிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள மையங்களில் தங்கி பயிலும்  மாற்றுத்திறனாளி மாணவர்கள்  கொரோனா பரவல் காரணமாக தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். தற்போது தேர்வுக்காக அவர்களை அழைத்து வரும் நடவடிக்கையை மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு துறை, கல்வி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் சிறப்பு அனுமதியுடன் தனி வாகனம் மூலம் அழைத்து வந்து  அவர்கள் ஏற்கனவே தங்கியிருந்த பள்ளி முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.  நேற்று திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த 10 மாற்றுத்திறனாளிகள் தனி பஸ்சில் நெல்லைக்கு அழைத்து வரப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். பின்னர் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள சிவசைலம் பள்ளி மையத்திற்கு தனி பஸ்சில் அழைத்துச் செல்லப்பட்டனர். இதுபோல் பிற மாவட்டங்களிலிருந்தும் மாற்றுத்திறனாளி மாணவர்களை அழைத்து வரும்பணி  நடைபெற்று வருகிறது.

Related Stories: