2 சிறப்பு விமானத்தில் தமாம், மஸ்கட்டில் சிக்கிய 314 பேர் சென்னை திரும்பினர்

சென்னை: கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டதையடுத்து விமான சேவை தொடங்கியுள்ளது. வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் சிக்கியவர்கள் சொந்த ஊருக்கு, சிறப்பு விமானம் மூலம் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், தமாமில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு தனி விமானம் நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணிக்கும், மஸ்கட்டில் இருந்து சிறப்பு தனி விமானம் 10.30 மணிக்கும் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தன. மொத்தம் 314 இந்தியர்கள் வந்தனர். அவர்களில் 238 ஆண்கள், 57 பெண்கள், 17 சிறுவர்கள், 2 குழந்தைகள். இவர்கள் அனைவரையும், அரசு அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் சமூக இடைவெளியின்படி வரிசைப்படுத்தப்பட்டது.  அனைவருக்கும்  மருத்துவ பரிசோதனை, குடியுரிமை, சுங்க சோதனைகள் நடத்தப்பட்டன.  

இதையடுத்து, 14 நாட்கள் தனிமைப்படுத்த 23 பேர், தனி பஸ்சில் மேலக்கோட்டையூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு அனுப்பினர். கட்டணம் செலுத்தி தங்க விருப்பப்பட்ட 189 பேர், தனி பஸ்களில் சென்னை நகரில் உள்ள 4 சொகுசு ஓட்டல்களுக்கு அனுப்பப்பட்டனர். மஸ்கட்டில் இருந்து வந்த ஒரு தம்பதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Related Stories: