கொரோனா நாளுக்கு நாள் அதிகமாக பரவுகிறது..பாதுகாப்பு வழிமுறைகளை யாரும் உதறிவிட வேண்டாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா: கொரோனா வைரஸின் வீரியம் குறைந்துவிட்டதாக நினைத்து பாதுகாப்பு வழிமுறைகளை யாரும் உதறிவிட வேண்டாம் என்று அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்விட்சரலாந்து தலைநகர் ஜெனீவாவில் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம், நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே செல்வதாக கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், ஏறக்குறைய 70 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டனர். ஐரோப்பிய நாடுகளில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், உலகளவில் தொற்று பரவல் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் 10 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்று முன்தினம்(7ம் தேதி) 1,36,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டவர்களில் 75% பேர் 10 நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும், இந்த மரணங்கள் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் பதிவாகியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரேசில் குறித்து கவலை தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ், அந்நாட்டு மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டுள்ள பாதி பேருக்கு அறிகுறி இல்லாத தொற்று ஏற்பட்டுள்ளதாக டெட்ரோஸ் கூறியுள்ளார். தற்போது, கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால் பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் உதற கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மக்களுக்குள் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான திருப்தி, அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: