திருவனந்தபுரம்: திருச்சூரில் நாயின் வாயை மர்ம நபர்கள் டேப் பயன்படுத்தி இறுக ஒட்டியதால் அது தண்ணீர் கூட குடிக்க முடியாமலும், உணவு உண்ண முடியாமலும் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் யானை ஒன்று தேங்காய் வெடி பயன்படுத்தி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தால் எழுந்த பரபரப்பு இதுவரை அடங்கவில்லை. இந்த நிலையில் திருச்சூர் நகரத்தின் ைமயப்பகுதியில் உள்ள ஒல்லூர் சந்திப்பில் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஒரு தெருநாய் வாயை சுற்றிலும் டேப் ஒட்டப்பட்ட நிலையில் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதியினர் அங்குள்ள விலங்குகள் நல அமைப்பிற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது நாயை காணவில்லை. பல இடங்களில் தேடியும் நாயை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த நாய் மீண்டும் ஒல்லூர் சந்திப்பு அருகே நின்று கொண்டிருந்தது. 2 வாரமாக சாப்பிட முடியாததால் அது மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்டது. டேப் இறுக்கமாக சுற்றப்பட்டிருந்ததால் அதன் வாயில் சதை பிய்ந்து எலும்பு வெளியே தெரிந்த நிலையில் வாயில் இருந்து ரத்தமும் ெகாட்டிக் கொண்டிருந்தது. அப்பகுதியினர் விலங்குகள் நல அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து நாயை பிடித்து வாயில் ஒட்டப்பட்டிருந்த டேப்பை அகற்றினர். அகற்றிய உடன் நாய்க்கு தண்ணீர் கொடுத்தனர்.
2 வாரமாக எதுவும் சாப்பிடாததால் 2 லிட்டர் தண்ணீரை நாய் ஒரே மூச்சில் குடித்தது. பின்னர் நாயை சிகிச்சைக்காக தங்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது நாய் நலமாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். சில கொடூர உள்ளம் படைத்த மனிதர்களின் மனிதாபிமானம் அற்ற செயலால் 5 அறிவு ஜீவன்கள் தவிப்பது அதிகரித்து வருவது விலங்குகள் நல ஆர்வலர்களை வருத்தமடைய செய்துள்ளது.