டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுக்கும் குடிமகன்களுக்கு தெர்மல் பரிசோதனை கட்டாயம்: ஊழியர்கள் வலியுறுத்தல்

சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கு மதுவாங்க வரும் குடிமகன்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யும் வகையில் தெர்மல் ஸ்கேனர் கருவிகளை அரசு வழங்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது: டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு ஒருசில தினங்கள் மட்டுமே சமூக இடைவெளியும், அரசின் உத்தரவுகளும் கடைபிடிக்கப்பட்டது. தற்போது அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. மதுவாங்க வரும் குடிமகன்களில் 80 சதவீதம் பேர் மாஸ்க் அணிவதில்லை. நிர்வாகம் சார்பில் கடைகளுக்கு வழங்கப்பட்டு வந்த சானிடைசர்களும் தற்போது வழங்கப்படவில்லை. ஊழியர்கள் தங்களின் சொந்த செலவிலேயே சானிடைர்களையும், மாஸ்க்குகளையும் வாங்கி வருகின்றனர்.

இதேபோல், எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் கடைகளுக்கும் மதுவாங்க வரும் குடிமகன்கள் மூலம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது. ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து கடைகளில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே, டாஸ்மாக் கடைகளுக்கு மதுவாங்க வரும் குடிமகன்களுக்கு தெர்மல் ஸ்கேனர் சோதனை கட்டாயம் என்று அரசு அறிவிக்க வேண்டும். அதற்கான கருவிகளை கடைகள் தோறும் அரசு வழங்க வேண்டும்.

மேலும், மதுக்கடைகளில் பணிபுரிந்து வரும் அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். பலரும் எந்த வித அறிகுறியும் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். கொரோனா நோய் பெருந்தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை டாஸ்மாக் பணியாளர்களுக்கும் விரிவு படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: