விவசாய பயிர்களை பாழாக்கி வரும் வெட்டுக்கிளிகளை கவர்ந்து அழிக்கும் மின்பொறி தயாரிப்பு: சேலம் இன்ஜினியரிங் மாணவர் அசத்தல்

இளம்பிள்ளை: உலகம் முழுவதும் விவசாய பயிர்களை அழித்து, விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் வெட்டுக்கிளிகளை அழிக்கும் மின்பொறியை உருவாக்கி, சேலத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் அசத்தியுள்ளார். கொரோனா வைரசுக்கு அடுத்தபடியாக, நாடு முழுவதும் பாலைவன வெட்டுக்கிளிகள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் பஞ்சாப், மகாராஷ்டிரா, ஆந்திராவில் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டமாக படையெடுத்து வரும் இந்த வெட்டுக்கிளிகள், பல்லாயிரக்கணக்கான பயிர்களை கபளீகரம் செய்து அழித்து வருகிறது. இதனை ஒழிக்க வேளாண் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி வி.பி.எஸ்.காலனியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி சுரேஷ்குமார்-ரேவதி தம்பதியின் மகனான இன்ஜினியரிங் மாணவர் உதயகுமார்(19), வெட்டுக்கிளியை கவர்ந்து அழிக்கும் மின்பொறியை உருவாக்கியுள்ளார்.

திருச்சி அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்பக் கல்லூரியில், மெக்கானிக்கல் 3ம் ஆண்டு படித்து வரும் இவர், வெட்டுக்கிளிகளை அழிக்க 5 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட கம்பி சுருளில் மின்சார உதவியுடன் பல்பு அமைத்து, ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் வெட்டுக்கிளிகளை அழிக்கும் அளவிற்கு புதிய மின்பொறியை உருவாக்கி அசத்தியுள்ளார். இந்த மின்பொறியை உருவாக்க ₹12 ஆயிரம் மட்டுமே செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாணவர் உதயகுமார் கூறியதாவது:இந்த கருவியில் உள்ள விளக்கை, மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை எரிய விட வேண்டும். அப்போது, வெட்டுக்கிளிகள் இந்த விளக்கால் ஈர்க்கப்பட்டு, கம்பு சுருளில் அமரும். அப்போது, கம்பி சுருளில் உள்ள மின்சாரம் பாய்ந்து வெட்டுக்கிளிகளை அழித்து விடும். இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் வெட்டுக்கிளிகள் வரை அழிக்க முடியும். இதை தவிர, இன்ஜினுக்கு பதிலாக மின்மோட்டார் மூலம் சார்ஜ் ஏற்றி, பைக்கை ஓட்டும் இருசக்கர வாகனத்தையும், டூவீலர் இன்ஜினை பொருத்தி ஓட்டும் சைக்கிளையும், ரோபோ உள்ளிட்டவற்றையும் உருவாக்கியுள்ளேன். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய பயிர்களை அழித்து, விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள வெட்டுக்கிளியை ஒழிக்கும் இந்த மின்பொறியை, வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: