79 நாட்களுக்கு பிறகு பொதுமக்களுக்கு அனுமதி திருப்பதி ஏழுமலையானை இன்று முதல் தரிசிக்கலாம்

திருமலை: ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோயிலில், 79 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இது குறித்து திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி அளித்த பேட்டி: கொரோனா ஊரடங்குக்கு பிறகு திங்கட்கிழமை முதல் உள்ளூர் பக்தர்கள், தேவஸ்தான ஊழியர்கள் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.  முகக்கவசமின்றி வருவோர் அனுமதிக்கப்படமாட்டார்கள். கோயிலில் தீர்த்தம், சடாரி, சிறிய லட்டுகள் வழங்குவது இருக்காது.

திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அலிபிரியில் உடல் வெப்ப நிலை கண்டறிந்து, கிருமிநாசினி கொடுத்து கைகளை சுத்தம் செய்த பின்னரே மலைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஏழுமலையான் கோயிலில் கடந்த மார்ச் 20ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி நிறுத்தப்பட்டிருந்தது. சுமார் 79 நாட்களுக்கு பிறகு இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்ளூர் பக்தர்கள்  அனுமதிக்கப்பட உள்ளனர். 11ம் தேதி முதல் வெளிமாநில பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

ஒரு லட்டு இலவசம்

ஏழுமலையானை தரிசிக்கும் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு இலவச லட்டு வழங்கப்படும். கூடுதல் லட்டுகள் தேவைப்படுவோர் கோயிலுக்கு வெளியே உள்ள கவுன்டரில் ₹50க்கு பெறலாம்.

கேரளாவிலும் அனுமதி

கேரளாவில்  நாளை முதல் பிரசித்தி பெற்ற  சபரிமலை, குருவாயூர், பத்மநாபசுவாமி கோயில்கள் திறக்கப்படுகின்றன. இவற்றில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இந்த கோயில்களில் ஆன்-லைனில் முன்பதிவு  செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. காலை 8.30 மணி  முதல் பகல் 11.15 வரையும், மாலை 4.30 முதல் 6.15 மணி வரை மட்டுமே தரிசனம் செய்யலாம். ஒருவருக்கு 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

Related Stories: