இல்லாத இடங்கள் இல்லை நுழையாத துறைகள் இல்லை: அமலாக்கப் பிரிவிலும் தாக்குதல்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் இல்லாத நாடும் இல்லை, அது விட்டு வைக்காத துறையும் இல்லை என்னும் அளவுக்கு அதன் பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ், இந்தியாவை பொருத்தவரை மற்ற நாடுகளில் தனது கிளைகளை பரப்பி விரிவடைந்த பின்னரே தாக்கத் தொடங்கியது.  கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடு, முகக்கவசம், சுத்திகரித்தல், சமூக இடைவெளி என்ற நோய் தடுப்பு கட்டுப்பாடுகளுடன் இந்தியா சுதாரித்து கொண்ட நிலையிலும், வெளிமாநில தொழிலாளர்கள் அவலம், சந்தைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அதன் தாக்கம் சமீபகாலமாக விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது.  

Advertising
Advertising

உலக நாடுகளில் எப்படி கொரோனா இல்லாத நாடே இல்லை என்று கூறும் நிலை இருக்கிறதோ, அதேபோல் இந்தியாவில் கொரோனா இல்லாத மாநிலங்களும் இல்லை, அது விட்டு வைக்காத அரசுத் துறைகளும் இல்லை என்ற அளவுக்கு ஆகிவிட்டது. மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் எங்காவது ஒரு மூலையில் கொரோனா தனது கால் தடத்தை பதித்து வருகிறது.  கடந்த இரண்டு மாதங்களில் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக் தலைமையகம், விமானப் போக்குவரத்து துறை தலைமை அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, மக்கள் நலத்துறை, புவனேஸ்வரில் உள்ள உளவுப் பிரிவின் ஒடிசா மாநிலத் தலைமையகம், டெல்லி சிஆர்பிஎப் தலைமையகம், கடந்த வாரம் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகம், என கொரோனா தனது கைவரிசையைக் காட்டி வந்தது.

இதில் முக்கியமானது என்னவென்றால், ஆம்புலன்சே ஆக்சிடன்ட் ஆவது போல, கடந்த இரு தினங்களுக்கு முன் மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று பாதித்தது. இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகம் நேற்றும், இன்றும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், நிதி மோசடி, ஊழல் தடுப்பு, கருப்பு பணம், அந்நிய செலாவணி மோசடி உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்கும் மத்திய அரசின் ஊழல் தடுப்பு அமைப்பான அமலாக்கத் துறையிலும் கொரோனா நேற்று கால் பதித்தது. அங்கு 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களில் இருவர் ஒப்பந்த பணியாளர்கள்.

கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 14 பேரும் அடையாளம் காணப்பட்டு அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அதன் தலைமையகத்தை நாளை வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: