நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை எதிரொலி: பழநி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு

பழநி: மேற்குத்தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் மழை காரணமாக பழநி கோடைகால நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி நகருக்கு கொடைக்கானல் சாலையில் உள்ள கோடைகால நீர்த்தேக்கத்தில் இருந்தும், பாலசமுத்திரத்தில் உள்ள பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்தும் குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததாலும், கடும் வெயிலின் காரணமாகவும் அணைகளில் நீர் இருப்பு குறைந்தது. இதனால் குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. குடிநீர் தட்டுப்பாட்டின் காரணமாக பழநி நகரில் தற்போது 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பல இடங்களில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த கோடைகால நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 4 மீட்டர் உயரத்திற்கு நீர் நிறைந்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து இருப்பதால் நீர்மட்டம் மேலும் உயரும் சூழ்நிலை உள்ளது. இதுபோல் பாலாறு-பொருந்தலாறு அணைக்கும் நீர்வரத்து ஏற்படும் சூழல் உண்டாகி உள்ளதால் பழநி நகரில் நிலவி வந்த குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: