சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்பழகன் எம்.எல்.ஏ. உடல்நலம் பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டறிந்தார். திமுகவின் எம்.ஏல்.ஏவும், திமுக-வின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான ஜெ. அன்பழகன் உடல்நலக்குறைவால் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அவருடைய உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் ஜெ. அன்பழகனை நலம் விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு வருகை தந்தார். அங்கு மருத்துவர்களிடமும், அவருடைய குடும்பத்தாரிடமும் உடல்நலம் முன்னேற்றம் குறித்து அவர் கேட்டறிந்தார். ஸ்டாலினுடன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.