மூக்கையூரில் துறைமுகம் இருந்தும் படகுகளை நிறுத்த அனுமதிக்காமல் மீன்வளத்துறை அதிகாரிகள் கெடுபிடி: மீனவர்கள் குற்றச்சாட்டு

சாயல்குடி: சாயல்குடி அருகே மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம் திறக்கப்பட்டும், ஓராண்டாக பயன்பாட்டிற்கு கொண்டுவராமல் இழுத்தடித்து, படகுகளை நிறுத்த அனுமதிக்காததால் தொழில் முடங்கி வருவதாக மீனவர்கள் புகார் கூறுகின்றனர். சாயல்குடி அருகே மூக்கையூரில் மிக ஆளமான கடற்கரை உள்ளது. இப்பகுதியில் ஏர்வாடி முதல் ரோச்மாநகர் வரை சுமார் 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மீனவர்களின் நலன் கருதி கடந்த 2010ம் ஆண்டு மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 2016 டிச.30ந் தேதி மத்திய அரசு ரூ.113.90 கோடி நிதியை ஒதுக்கி, எஞ்சிய ரூ.56.95 கோடியை தமிழக அரசு பங்கு தொகையாக போட்டு பணியை துவங்க ஒப்புதல் கொடுத்தது. இதனையடுத்து மூக்கையூரில் கடந்த 2017 முதல் கடற்கரையில் துறைமுகத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது. கடல் மட்டத்தோடு சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு பாறை கற்களை போட்டு பாதை அமைத்தல், படகுகள் நிறுத்தும்தளம், வலை பின்னுதல், உலர்த்துதல் தளம், மீன் ஏலக்கூடம், ஓய்வறை, உலர்களம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு  பணிகள் நடந்து முடிந்தது. 20 சதவீத பணிகள் நிறைவுபெறாத நிலையில், 2019 மார்ச் 4ந் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் துறைமுகத்தை திறந்து வைத்தார். ஆனால் துறைமுகத்தில் பணிகள் முழுமையடையாமல் திறக்க வேண்டாம். அனைத்து உள்கட்டமைப்பு பணிகள் முழுமையடைந்த பிறகு திறக்க வேண்டும் என மீனவர்கள் அப்போது வலியுறுத்தினர்.

அதற்கு மீன்வளத்துறை அதிகாரிகள் மூன்று மாதத்தில் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என உத்திரவாதம் கொடுத்ததாக மீனவர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒரு வருடம் ஆகியும் பணிகள் நிறைவடையவில்லை. பயன்பாட்டிற்கும் வரவில்லை.  கொரோனா ஊரடங்கு, பலத்த காற்று, மீன்பிடி தடைக்காலம் போன்ற இந்த அசாதாரண சூழ்நிலையில் கூட விசைப்படகுகளை நிறுத்த அனுமதி மறுக்கின்றனர். இதனால் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இன்றி சிரமப்பட்டு வருவதாக மீனவர்கள் புகார் கூறுகின்றனர். இது குறித்து மூக்கையூர் மீனவர்கள் கூறும்போது, மூக்கையூர், கன்னிகாபுரி, ரோச்மாநகர், சாயல்குடி உள்ளிட்ட இப்பகுதி கிராம மீனவர்கள் 80க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகள், 10க்கும் மேற்பட்ட விசை படகுகள் வைத்துள்ளோம். தற்போது மீன்பிடி தடைக்காலம், கொரோனா ஊரடங்கால் தொழிலின்றி கடந்த மூன்று மாதமாக கடுமையாக பாதிக்கப்பட்டு, குடும்பங்கள் வறுமையில் வாடி வருகிறது.  

தற்போது கொரோனா தடை தளர்வு, மீன்பிடி தடைக்காலம் முடிந்த பிறகும் கூட பலத்த காற்றின் காரணமாக கடலுக்குள் செல்லவில்லை. இதனால் தொடர்ந்து படகுகளை நிறுத்தும் நிலை உள்ளது. ஆனால் மீன்வளத்துறை அதிகாரிகள், துறைமுகம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை, இங்கு விசை படகுகளை நிறுத்தக்கூடாது என கூறுகின்றனர். இதனால் ஏர்வாடிக்கு செல்லும் நிலை உள்ளது. அங்கும் படகுகளை நிறுத்த போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தற்போது அடித்து வரும் பலத்த காற்றிற்கு படகுகள் சேதமடைந்து வருகிறது. எனவே மூக்கையூர் துறைமுகத்தின் பணிகளை முழுமையாக முடித்து, மீனவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். விசைப்படகு, நாட்டு படகுகளை நிறுத்த அனுமதிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: