திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீன் ரத்து கோரிய குற்றப்பிரிவு போலீசின் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மத்திய குற்றப்பிரிவு போலீசின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலைஞர் வாசகர் வட்டம் சார்பில், கடந்த பிப்ரவரி மாதம் 14 ம் தேதி நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பட்டியலினத்தவருக்கு எதிராக பேசியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதுதொடர்பாக ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் அளித்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில்  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஆர் எஸ் பாரதி தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த 23ம் தேதி காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கும் தேதி (இன்று) வரை இடைக்கால முன் ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப் பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகும் தினத்தில் ஜாமீன் வழங்க உத்தரவிடக் கோரி ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவும் நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சண்முக சுந்தரம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி, இடைக்கால முன் ஜாமீனை ரத்து செய்யக் கூடாது என வாதிட்டார்.  நீதிமன்றத்தில் ஆஜராகும் தினத்தில் அவருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிடவும்

கோரினார்.

அப்போது அரசு தலைமை குற்றவியல் வக்கீல் நடராஜன் ஆஜராகி, புகார்தாரரை விசாரிக்காமல் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இடைக்கால முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனுவும், புகார்தாரர் கல்யாண சுந்தரத்தின் மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

ஆர்.எஸ்.பாரதி சரணடையும் தினத்தன்றே அவரது ஜாமீன் மனுவை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஏற்கனவே, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரியும், தனக்கு எதிராக பிறர் தொடர்ந்த வழக்குகளை சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: