ஞாபக மறதி குறைபாட்டால் பஸ் நிலையத்தில் தவித்த முதியவரை உறவினர்களிடம் சேர்த்த இளைஞர்கள்

பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், முடங்கி கிடந்தார். அவ்வழியாக சென்ற இளைஞர்கள் விக்னேஷ், அஜீஸ் ஆகியோர் முதியவரை எழுப்பி நீங்கள் யார், எந்த ஊர் என விசாரித்துள்ளனர். அந்த முதியவர் கண்ணீருடன், அதிராம்பட்டினத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்றும், வீட்டை விட்டு வெளியே வந்த எனக்கு திரும்பவும் வீட்டிற்கு செல்ல வழி தெரியாததால் கடந்த 3 நாட்களாக சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் படுத்துக்கிடந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அந்த இளைஞர்கள், உணவு மற்றும் தண்ணீர் வாங்கி வந்துகொடுத்து சாப்பிட வைத்தனர். அந்த முதியவரை போட்டோ எடுத்து அதிராம்பட்டினத்தில் உள்ள தனது நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளனர்.

அவர்கள்  ஊரில் விசாரித்தபோது ஒரு வீட்டில் இருந்து மாரியம்மாள், அவர் எனது கணவர் என்று தெரிவித்தார். இதையடுத்து அந்த இளைஞர்கள் கோவிந்தராஜை பைக்கில் அழைத்து கொண்டு அதிராம்பட்டினம் சென்றனர். நண்பர்கள் கொடுத்த முகவரியுடன் வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் 2 மருமகள்களிடம் ஒப்படைத்தனர். அப்போது மனைவி மாரியம்மாள், ‘‘அவருக்கு ஞாபக மறதி குறைபாடு உள்ளது. சில தினங்களுக்கு முன்பு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்று விட்டார். கொரோனா வைரஸ் பீதியால் வெளியில் சென்று தேடமுடியவில்லை. கடவுள் உருவத்தில் வந்து எங்களிடம் பத்திரமாக கொண்டு வந்து சேர்த்து விட்டீர்கள்’’ என அந்த இளைஞர்களிடம் தெரிவித்தனர்.

Related Stories: