16 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம்; உள்ளிமலை எஸ்டேட் வழியாக வரும் தண்ணீரை அனந்தனார் சானலில் விடவேண்டும்: பொதுப்பணித்துறையிடம் மாநகராட்சி வலியுறுத்தல்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் 16 நாட்களுக்கு ஒரு முறைகுடிநீர் விநியோகம் செய்யப்படும் நிலை உள்ளதால், உள்ளிமலை எஸ்டேட் வழியாக வரும் தண்ணீரை அனந்தனார் சானலில் திருப்பிவிடவேண்டும் என பொதுப்பணித்துறையிடம் மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.  நாகர்கோவில் மாநகராட்சி பகுதி மக்களுக்கு, முக்கடல் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 25 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை தண்ணீர் போதுமானதாக  இல்லை. கோடை காலங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. கடந்த  வருடம் பெய்த மழையால் முக்கடல் அணை நீர் மட்டம் 25 அடியை எட்டியது.

Advertising
Advertising

பின்னர் கோடையில் அணை நீர் மட்டம் மளமளவென குறைந்தது. முக்கடல் அணையில் நேற்று காலை மைனஸ் 19.6 அடியாக தண்ணீர் உள்ளது. அணை வற்றிய  நிலையில், பேச்சிப்பாறையில் இருந்து அனந்தனார் சானலில் திறக்கப்பட்ட சுமார் 50 கன அடி தண்ணீரை பம்பிங் செய்து, மாநகர மக்களுக்கு குடிநீர் வினியோகம்  செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது சானல் தூர்வாரும் பணிகள் நடப்பதால், அணை அடைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மாநகராட்சி மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படும் நாட்கள் நீண்டுகொண்டே போகிறது. அணையில் தண்ணீர் அடைப்பதற்கு முன்பு 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

தற்போது விநியோகம் செய்யப்படும் நாட்கள் 16 நாட்களில் இருந்து 17 நாட்கள் வரை ஆகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். குடிநீர் விநியோகம் செய்யப்படும் நாட்கள் நீட்டிப்பை குறைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது அனந்தனார் சானல் தூர்வாரப்பட்டுள்ளது. மேலும் அனந்தனார் சானலில் படந்து கிடக்கும் பாசிகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். ஊரக்கோணம் பகுதியில் ஷட்டர் வழியாக வீணாக செல்லும் தண்ணீரை சாக்குமுட்டை வைத்து அடைத்து அனந்தனார் சானலில் திருப்பிவிடும் பணியை செய்தள்னர்.

மேலும் உள்ளிமலை எஸ்டேட் வழியாக மழையால் உருவான காட்டாற்று வெள்ளம் பழையாற்றிற்கு வருகிறது. இந்த தண்ணீரை அனந்தனார் சானலில் விட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மாநகராட்சி அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது முக்கடல் அணையில் மைனல் அளவில் தண்ணீர் கிடப்பதால் சுமார் 10 அடி அளவிற்கு மட்டுமே அடிமடையுடன் தண்ணீர் திறக்க முடியும். அதன்பிறகு வண்டல் மண் மண்டி கிடப்பதால் தண்ணீர் எடுக்கமுடியாத நிலை உள்ளது. மேலும் அணையில் தண்ணீர் குறையும் நிலையில் அனந்தனார் சானலில் வரும் தண்ணீரை நம்பியே மாநகராட்சி இருந்தது.

தற்போது அணை மூடப்பட்டதால் குடிநீர் விநியோகம் நாட்கள் நீடித்துச்செல்கிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநகராட்சிக்கு முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. மாநகராட்சி மக்களுக்கு குடிநீர் சீராக விநியோகம் செய்யும் வகையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 50 கன அடி தண்ணீர் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. தற்போது சானல் தூர்வாரும் பணிக்காக அணையில் இருந்து வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் குடிநீர் விநியோகம் செய்யப்படும் நாட்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அனந்தனார் சானலில் தூர்வாரும் பணி முடிந்துள்ளது. உள்ளிமலை எஸ்டேட்டில் இருந்து பழையாற்றிக்கு மழை வெள்ளம் செல்கிறது. இந்த தண்ணீரை அனந்தனார் சானலில் திருப்பிவிட பொதுப்பணித்துறையிடம் கேட்டுள்ளோம். பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிமலை எஸ்டேட்டில் இருந்து வரும் தண்ணிரை திருப்பிவிட்டால் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் 6 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யலாம். என்றார்.

Related Stories: