ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிகரம் நீட்டிய டெல்லி விவசாயி: குவியும் பாராட்டு

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ள பண்ணை உரிமையாளரான விவசாயிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர் டெல்லியில் உள்ள காளான் பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி சில தொழிலாளர்கள் மார்ச் முதல் வாரத்தில் சொந்த ஊர் திரும்பி விட்டனர். அதன்பிறகு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், 10 புலம்பெயர் தொழிலாளர்களால் சொந்த மாநிலம் திரும்ப முடியாத நிலை நிலவியது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வெளிமாநில தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் பலர் தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக கடந்த 1-ந் தேதி முதல் ரெயில்வே அமைச்சகம் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ‘ஷர்மிக்’ சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. இந்த ரெயில்கள் இயக்கப்படுவதற்கு முன்னரே ஏராளமான தொழிலாளர்கள், பசியையும், வெயிலையும் தாங்கிக் கொண்டு நடைபயணமாக செல்கின்றனர்.

இப்படி சென்ற தொழிலாளர்களில் பலர் விபத்துகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவங்களும் நடந்து உள்ளன. இந்த செய்திகளை எல்லாம் பார்த்து மனவேதனை அடைந்த பப்பன் சிங் தன்னுடைய பணியாளர்கள் இதுபோன்ற துயரத்தை அனுபவிக்கக் கூடாது என நினைத்துள்ளார். அதனால் அவர்களை பண்ணையிலேயே தங்கி கொள்ளுமாறு உரிமையாளர் பப்பன் சிங் கலாட் தெரிவித்துள்ளார். பின்னர் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட பிறகு அதில் பதிவு செய்ய 10 பேரும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஊர் திரும்புவதற்கான வாய்ப்பு கிடைக்காததால் தனது குடும்பத்தினரை சந்திக்க முடியாமல் வருத்தமடைந்தனர். இந்நிலையில் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டதை அறிந்த பப்பன் சிங், தனது பண்ணையில் வேலை செய்யும் தொழிலாளர்களை விமானத்தில் பீகார் மாநிலம் அனுப்பி வைக்க முடிவு செய்தார்.

ரூ.68,000 செலவு செய்து 10 பேருக்கு  விமான டிக்கெட் எடுத்து கொடுத்துள்ளார். அவர்கள் பத்திரமாக விமான நிலையம் அடைவதற்காக கார் ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளார். மீண்டும் சொந்த ஊர் திரும்புவதுடன், விமானத்தில் பறக்க வேண்டும் என்ற தங்களுடைய ஆசையும் நிறைவேறியதால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தொழிலாளர்கள் கூறியுள்ளனர். டெல்லியில் இருந்த வரை தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், பண்ணை உரிமையாளர் உணவு வழங்கி கவனித்துக் கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள் தனது குடும்பத்தினருடன் நடைபயணமாக ஊர் திரும்பும் வழியில் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

ஆனால் எந்த கஷ்டமும் அனுபவிக்காமல் பாதுகாப்பாக ஊர் திரும்ப வேண்டும் என நினைத்த உரிமையாளர், விமான டிக்கெட் எடுத்துள்ள சம்பவம் பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது. மேலும் பப்பன் சிங்கை அரசு அதிகாரிகள், பொது மக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: