தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திலிருந்து 72.40மீ நீள காற்றாலை இறகு பெல்ஜியம் அனுப்பி வைப்பு

தூத்துக்குடி:   தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 72.40 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய காற்றாலை இறகினை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த எம்.வி.மரியா என்ற கப்பல் 151.67 மீட்டர் நீளமும் 8.50 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டது. இக்கப்பல் கடந்த 26ம்தேதி மதியம் 1.24 மணியளவில் வ.உ.சி துறைமுகத்தின் சரக்குதளம் மூன்றை வந்தடைந்தது.  72.40 மீட்டர் நீளமுடைய காற்றாலை இறகு கப்பலின் 3 ஹைட்ராலிக் பளுத்தூக்கி இயந்திரங்கள் மூலம் கையாளப்பட்டது. ஜெர்மனியிலுள்ள நோர்டிக்ஸ் எனர்ஜி என்ற நிறுவனத்திற்காக பெல்ஜியத்திலுள்ள ஆன்டேர்ப் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த காற்றாலை இறகுகினை சென்னை அருகாமையிலுள்ள மாப்பேடு என்ற இடத்திலிருந்து வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வரை பிரத்யேக லாரிகள் மூலம் தனியார் நிறுவனத்தினர் கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து வ.உ.சி துறைமுக சேர்மன் ராமச்சந்திரன் கூறுகையில், காற்றாலை உதிரிபாகங்களை கையாளுவதற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு இடவசதிகளும் துறைமுகத்தில் அமைந்துள்ளது. மேலும் சாகர்மாலா திட்டத்தின்கீழ் வ.உ.சி துறைமுக நிலங்களில் தொழிற்சாலைகள் துவங்குவதற்காக தூத்துக்குடி ஸ்பீட்ஸ்  என்ற திட்டத்தின் மூலம் தொழிற்பூங்கா அமைப்பதற்கு தேவையான 1000 ஏக்கர் பரப்பளவு நிலத்தினை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தொழிற்சாலைகள் உருவாவதற்கு தேவையான அனைத்து வசதிகள் இடம்பெறுவது மட்டுமல்லாமல் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட பொருட்களை குறைந்த போக்குவரத்து செலவில் உலக சந்தையில் விநியோகம் செய்யலாம் என்றார்.

Related Stories: