கோடை காலத்தில் தண்ணீர் தேவை அதிகரிப்பு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் நீண்டநேரம் காத்துக் கிடக்கும் மக்கள்: கொரோனா பரவும் அபாயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ரங்கசாமி ஆட்சி காலத்தில் மாநில மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 2011ம் ஆண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோக நிலையங்கள் தொடங்கப்பட்டன. படிப்படியாக அனைத்து தொகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.  ஒருநாளைக்கு சுமார் 24,000 லிட்டர் வரை சுத்திகரித்த நீரை உற்பத்திமூலம் கொள்முதல் செய்யும் இந்த நிலையங்களில் பொதுமக்கள் 20 லிட்டர் கேனை இதுவரையிலும் ரூ.7க்கு பெற்றுச் செல்கின்றனர். இதில் 5 ரூபாய் சுத்திகரிப்பு செய்யும் குடிநீர் நிலைய பராமரிப்பு பணிக்கும், ரூ.2 அரசுக்கும் வருமானமாக செல்கிறது. புதுவையில் தற்ேபாது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. கத்ரி நாளையுடன் முடிவடைந்தாலும் அனல் உக்கிரம் குறைந்தபாடில்லை. இதனால் பொதுமக்களுக்கான குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. வழக்கமாக 3, 4 நாளைக்கு ஒருமுறை குடிநீர் பிடிக்க சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வரும் ஒரு குடும்பம் தற்ேபாது ஒரிரு நாளைக்குள் மீண்டும் தண்ணீர் பிடிக்க வரும் நிலை உள்ளது.

 ஆனால் சுத்திகரிப்பு நிலையங்களில் தினசரி உற்பத்தி அதே நிலையில்தான் நீடிக்கிறது. அதுமட்டுமின்றி காலை 7 முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரையிலும் அதை திறந்து வைத்திருக்க வேண்டிய நிலையில் அங்குள்ள பணியாளர்கள் உள்ளனர்.  இதனால் தண்ணீர் அதிகளவில் இருப்பு உள்ள நேரத்தில் 4, 5 பிளாண்ட்களை (குடிநீர் குழாய்கள்) திறந்து பொதுமக்களுக்கு அவற்றை அவர்கள் விநியோகம் செய்கின்றனர். இருப்பு குறைந்ததும் ஒன்று, இரண்டு பிளாண்ட்களை மட்டுமே பயன்பாட்டில் வைத்திருக்கின்றனர். இதன் காரணமாக சுத்திகரிப்பு குடிநீர் நிலையங்களுக்கு தண்ணீர் பிடிக்க வரும் பொதுமக்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

 ஒருகட்டத்தில் பொறுமை இழக்கும் நுகர்வோர்கள், கொரோனா பரவலைகூட பெரிதுபடுத்தாமல் சமூக இடைவெளியை மீறி நெருக்கமாக இந்த சுத்திகரிப்பு நிலையங்களில் தண்ணீர் பிடிக்க முண்டியடிக்கும் நிலையையும் ஆங்காங்கே காண முடிகிறது. காலை 6 மணிக்கே தண்ணீர் பிடிக்க வரிசையில் கேன்களை போட்டு வைத்திக்கும் அவலமும் நீடிக்கின்றன.

 எனவே கோடை காலங்களில் மட்டும் இங்கு தண்ணீரின் உற்பத்தியை தினமும் அதிகரித்து அங்குள்ள எல்லா பிளாண்ட்களையும் செயல்பாட்டில் வைத்திருந்தால் உடனுக்குடன் பொதுமக்கள் கட்டணத்தை செலுத்தி தண்ணீரை பிடித்தும் செல்லும் நிலையை உருவாக்கலாம். இல்லாவிடில் தினமும் அங்கு கும்பலாக நுகர்வோர் நிற்கும் பட்சத்தில், கொரோனா தொற்று பரவல் போன்றவை சமூக பரவலாக இதுவும் ஒரு காரணமாகிவிடும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். 

Related Stories: