சாலையோரங்களில் கலர், கலராய் விற்பனை மாஸ்க்கிலும் புகுந்தது வாஸ்து ராசிக்கு ஏற்ப தினமும் ஒரு கலர்

நெல்லை: கொ ரோனா பரவலை தடுக்க பயன்படுத்தப்பட்டு வரும் மாஸ்க்கில் கூட ராசிக்கு ஏற்ப தினமும் ஒரு கலர் என விதவிதமாக பலர் பயன்படுத்த துவங்கி விட்டனர். இதனால் சாலையோரங்களில் விற்பனை களைகட்டியுள்ளது. மேலும் தெருக்களில் இலவசமாக தரும் மாஸ்க்குகளை பயன்படுத்துபவர்களிடம் கொள்ளை சம்பவம் நடக்கலாம் என போலீசார் எச்சரிக்கை செய்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இருந்த போதும் பல தளர்வுகளை அறிவித்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அன்றாட தேவைகளை நிறைவேற்றவும், வேலைகளுக்கு செல்லவும் வழிவகை செய்துள்ளது. பொதுமக்கள் வெளியே செல்லும் போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். இல்லையெனில் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் குறைந்த பட்சம் ரூ.100 அபராதம் விதிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளனர். இரு சக்கர வாகனங்கள், கார்களில்  செல்பவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். மேலும் கைகளை கிருமி நாசினி, சோப்பு கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

தரமான என்.95 மாஸ்க்குகள் விலை தாறுமாறாக ஏறிவிட பலர் சாலையோரங்களில் 10 ரூபாய்க்கு கிடைக்கும் மாஸ்க்குகளை நாடத்துவங்கி விட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் சாலை ஓரங்களில் முக கவசம் விற்பனை செய்வோர் புற்றீசல் போல் தோன்றினர். திரும்பும் திசையெங்கும் மாஸ்க்குகள், கிருமி நாசினிகள் விற்பனை செய்யப்படுகின்றன.  ஊரடங்கால் வேலையின்றி பரிதவித்த பலர் மாஸ்க் விற்பனையில் ஈடுபட்டனர். சாலை ஓரத்தில் மரத்தடி நிழலில் ஒரு டேபிள், சேர் மட்டும் இருந்தால் போதும். பணியன் துணியில் விதவிதமான கலரில், விதவிதமான டிசைன்களில் மாஸ்க்குகளை வாங்கி விற்பனை செய்யத் துவங்கி விட்டனர். இங்கு விற்பனை செய்யப்படும் மாஸ்க்குகள் டிசைன் மற்றும் தரத்திற்கேற்ப ரூ.10 முதல் 40 வரை விற்பனை செய்யப்படுகிறது. கொரோனாவுடன் வாழ பழகி கொண்டதால் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக ஒரே மாதிரி மாஸ்க்குகளை பயன்படுத்தியவர்களுக்கு தற்போது சலிப்பு தட்டி விட்டது.

இதைதொடர்ந்து பலர் உடுத்தும் ஆடைகளின் நிறத்திற்கேற்பவும், ஒவ்வொரு தின ராசிக்கேற்ற கலர்களிலும் மாஸ்க்குகள் வாங்கி பயன்படுத்த துவங்கி விட்டனர்.

இதற்காக மாஸ்க் விற்பனையாளர்கள் 12 கலர்களிலும், வனவிலங்குகள், நடிகர்கள், ஸ்பைடர் மேன் உள்ளிட்ட பல்வேறு வகையான மாஸ்க்குகளை விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர். கேரளா, நாகர்கோவிலின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொதுமக்களின் புகைப்படத்தை கொடுத்தால் அதனை துணியில் பிரின்ட் செய்து முகம் போலவே மாஸ்க் தயாரித்து கொடுக்கின்றனர். தற்போது அதுவும் பேஷனாகி வருகிறது.

வாங்கியதும் பயன்படுத்த வேண்டாம்

சாலை ஓரங்களில் ஏராளமான மாஸ்க்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை தினமும் பலர் கைகளில் எடுத்து பார்த்தும், சிலர் மாஸ்க் தங்கள் முகத்திற்கு பொருந்துகிறதா என அணிந்து பார்த்தும் வாங்கிச் செல்கின்றனர். மேலும் சாலைகளில் உள்ள தூசு முழுவதும் மாஸ்க்குகளில் ஒட்டி இருகின்றன. இதனால் மாஸ்க்குகளை வாங்கியதும் அப்படியே பயன்படுத்தக் கூடாது என்றும், வீட்டிற்கு சென்றவுடன் வெந்நீர் மற்றும் கிருமிநாசினியில் அலசி வெயிலில் உலர்த்திய பின்பே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: