லடாக் எல்லையில் சீன படைகள் குவிப்பு: மத்திய அரசு கண்டிப்பு.

புதுடெல்லி: இந்தியாவின் லடாக் எல்லை பகுதியில் சீனா ராணுவத்தை குவித்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்தின் பான்காங் சோ ஏரி மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதிகளில் சீனா வேகமாக படைகளை குவித்து வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கை இந்திய ராணுவத்துடனான அதன் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வர விரும்பவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது என்று அப்பகுதியினர் தெரிவித்தனர். கடந்த இரண்டு வாரத்தில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் சீனா நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களை அமைத்துள்ளது. பதுங்கு குழிகள் அமைப்பதற்கான இயந்திரங்களையும் வரவழைத்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைகள் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த பதற்றம் நிறைந்த சூழலில் தான், ராணுவத் தளபதி எம்.எம். நரவானே கடந்த வெள்ளிக்கிழமை லே பகுதியில் உள்ள 14 முகாம்களுக்கு வருகை புரிந்தார். அப்பகுதியில் இந்திய படைகளின் தயார்நிலை குறித்தும் ஆய்வு செய்தார். முன்னதாக, கிழக்கு லடாக் பகுதியில் 250க்கும் மேற்பட்ட இந்திய, சீன ராணுவ வீர‍ர்கள் கல்வீச்சு தாக்குதலில் கடந்த 5, 6 தேதிகளில் ஈடுபட்டத்தைத் தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையிலான உறவு மோசமான நிலையை அடைந்துள்ளது. இதில், இருதரப்பிலும் நூறுக்கும் மேற்பட்ட வீர‍ர்கள் காயமடைந்தனர். இதற்கு முன்பு கடந்த 9ம் தேதி சிக்கிம் மாநிலத்தின் கிழக்கு பகுதியிலும் இரு தரப்பு வீர‍ர்களும் மோதலில் ஈடுபட்டனர். கிழக்கு லடாக் பகுதியில் கடந்த வாரத்தில் சீன படைகள் ஊடுருவியதாக அறிக்கைகள் வந்த போதிலும் அதிகாரப்பூர்வமாக உறுதிப் படுத்தப்படவில்லை.

கடந்த வாரத்தில் மட்டும் இரு நாடுகளின் ராணுவப்பிரிவு அதிகாரிகள் மட்டத்தில் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அப்போது, வரையறுக்கப்பட்ட எல்லைகளில் மட்டுமே ராணுவத்தை நிறுத்தி வைத்துள்ளதாகவும், சீனா ஒவ்வொரு எல்லைப் பகுதிகளிலும் அத்துமீறி ராணுவத்தினரை ஊடுருவ செய்வதாகவும் இந்தியா சுட்டிக் காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: