சேலம் உள்பட 4 மாவட்டங்களில் பிரதான தொழில்கள் முடங்கியதால் 50நாட்களில் ரூ.4ஆயிரம் கோடி நஷ்டம்: தொழில்துறை ஒருங்கிணைப்பாளர்கள் தகவல்

சேலம்: சேலம் மண்டலத்தில் பலலட்சம் தொழிலாளர்களுக்கு வாழ்வளித்த பல்வேறு பிரதான தொழில்கள்  கொரோனா ஊரடங்கால் முடங்கியுள்ளது. இதனால் உற்பத்தி நிறுத்தம், வருவாய் இழப்பு என்று ₹4ஆயிரம்  கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உலகநாடுகள் அனைத்தையும் அதிரவைத்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, இந்தியாவில் கடந்த மார்ச் 24ம்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து வகை போக்குவரத்தும்  நிறுத்தப்பட்டது. குடிசைத் தொழில் முதல் பல கோடி முதலீடுகளில் நடக்கும் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டது. கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து, வருமானம் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 50நாட்கள் ஊடரங்குக்கு பிறகு, தற்போது விதிக்கப்பட்டுள்ள தளர்வுகளால் மீண்டும் சிறுதொழில் நிறுவனங்கள் செயல்படத் துவங்கியுள்ளன. அதே நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பும், உற்பத்தி முடக்கமும் ஏற்பட்டுள்ளது. சேலம் மண்டலத்தில் மட்டும் பிரதான தொழில்கள் முடங்கியதால், ₹4ஆயிரம் கோடிக்கு உற்பத்தி நிறுத்தமும், வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

இது குறித்து சேலம் மண்டல தொழில்துறை ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதற்கடுத்த நிலையில் சேலத்தில் விசைத்தறி கூடங்கள், வெள்ளிப்பட்டறைகள், நாமக்கல்லில் லாரிகள், கோழிப்பண்ணைகள், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் பூக்கள் சாகுபடியும், ஏற்றுமதியும் பிரதான தொழிலாக உள்ளது. இதில் சேலம், மேட்டூர், இளம்பிள்ளை, குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் மட்டும் 5லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இதனை சார்ந்து நெசவாளர்கள், வியாபாரிகள், சாயப்பட்டறைகள், பாவு போடுவோர், நூல் வியாபாரிகள் என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் 20 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வருவாய் இழப்பு, உற்பத்தி முடக்கம் என்று ₹1500 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் சேலத்தில் குகை, செவ்வாய்ப்பேட்டை, ஆண்டிப்பட்டி, பனங்காடு, தாதகாப்பட்டி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளிப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிலில் ஒரு கொலுசு உருவாக வேண்டும் என்றால் 20க்கும் மேற்பட்ட நிலைகளில் உள்ள தொழிலாளர்களை கடந்தே வரவேண்டும். நேரடியாகவும், மறைமுகமாகவும்  2லட்சம் தொழிலாளர்களுக்கு வாழ்வளித்த இந்த தொழில் முடங்கியதால், ₹500 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் லாரிகளின் கேந்திரமாக திகழ்வது நாமக்கல். இங்கும், அதன் அருகாமையில் உள்ள சேலம் மாவட்டத்திலும் 80ஆயிரம் லாரிகள் உள்ளன. இந்த லாரிகளை நம்பி டிரைவர்கள், கிளீனர்கள் மட்டுமன்றி கூண்டு கட்டும் பட்டறைகள், மெக்கானிக் பட்டறைகள், உதிரிபாக விற்பனை கடைகள், லேத்பட்டறைகள்,  கண்ணாடி பட்டறைகள் என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் 10லட்சம் தொழிலாளர்கள் குடும்பம் நடத்தி வந்தனர். 50நாட்களாக லாரித் தொழில் முடங்கியதால் ₹1500 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

 நாமக்கல் மாவட்டத்தில் மேலும் பிரசித்தி பெற்றது கோழிப்பண்ணைகள். நாமக்கல் மற்றும் அதன் அருகாமை ஊர்களில் சிறியவை, பெரியவை என்று 1500 கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. இதை நம்பியும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள், டிரைவர்கள், உதவியாளர்கள்  என்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஊரடங்கால், ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்ட சுணக்கத்தால் இதிலும் ₹200 கோடி மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் ரோஜாக்கள், வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 1500 பண்ணைகளில் சாகுபடி செய்யப்படும் ரோஜாக்களால் ஏற்றுமதியாளர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், தரகர்கள், பேக்கிங் செய்வோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50ஆயிரம் பேர் வாழ்க்கை நடத்துகின்றனர்.  கொரோனா ஊரடங்கால்  ரோஜா ஏற்றுமதி முடங்கியுள்ளது. இதனால் ₹50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் சேகோ உற்பத்தி,  ஸ்டீல் பர்னிச்சர், செங்கல்சூளைகள், கயிறு திரித்தல், வீட்டு உபயோக பொருட்கள் தயாரித்தல் என்று பல்வேறு தொழில்கள் முடங்கியதாலும் கோடிகளில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த  வகையில் சேலம் சரகத்தில் பிரதான தொழில்கள் முடங்கிய வகையில் மட்டும் உற்பத்தி முடக்கம், வர்த்தகம் தேக்கம் என்று ₹4ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் தொழில் சார்ந்த ஒருங்கிணைப்பாளர்கள்.

குழுக்கள் அமைத்து அரசு ஆய்வு செய்ய வேண்டும்

இது குறித்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், ‘‘கொரோனா காலம், அனைத்து தொழில்களையும் ஒரு இக்கட்டான சூழலுக்கு தள்ளிவிட்டது. இதிலிருந்து மீண்டுவர எத்தனை நாட்களாகும் என தெரியவில்லை. இதில் பல தொழில்கள்  அரசுக்கு வருவாய் மற்றும் அன்னியச் செலவாணி ஈட்டித்தரும் தொழில்களாக உள்ளது. எனவே அனைத்து தொழில்களிலும் ஏற்பட்டுள்ள முடக்கம், வருவாய் இழப்பு, தேக்கம் குறித்து ஆய்வு செய்ய மத்திய, மாநில அரசுகள் குழுக்களை அமைக்க வேண்டும். அதன்படி தொழில்களை மீட்டெடுப்பதற்கான உதவிகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: